பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 47

என்ற பாடலை நாவினால் நவிற்றிச் சேவிக்கின்றோம்.

அடுத்து சிவபெருமான் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை,

சிந்தனைநின் தனதாக்கி நாயி னேன்றன்
       கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
       மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார
வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
       மாலமுதப் பெருகடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
       தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே

- திருவா: திருச்சதகம்-26

என்ற மணிவாசகப் பெருமானின் மணிவார்த்தைகள் அடங்கிய பாடலைப் பாடி வணங்குகின்றோம்.

தத்தாத்ரோயர், மகாவீர் (சமணம் கண்டவர்) ஆகியோர் சந்நிதிக்குச் சென்று வணங்கி வாழ்த்தி திருக்கோவிலை விட்டு வெளிவந்து நயாகரா அருவியைக் காணப் புறப்படுகிறோம்.

2. பூங்காக்கள்

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது பூங்காக்களுக்குச் சென்றுவர சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அவை பற்றி விவரங்களுடன் ஈண்டு விளக்குவேன்.

(1) இல்லத்தருகிலுள்ள பூங்கா[1]: (ஏப்ரல் 13 அன்று இப்பூங்காவிற்குச் சென்றோம்.) என் மகன் இல்லத்திலிருந்து சுமார் அரை ஃபர்லாங் தொலைவிலுள்ளது இந்தப் பூங்கா. சாலையோர நடைபாதை வழியாகவே நடந்து சென்று இந்தப் பூங்காவை அடையலாம். நீள்வட்டமாகவுள்ள இது சரிவாக உள்ள ஒரு குளம்; தண்ணீர் மூன்றிடங்களில் ‘குபுகுபு’ என்று குமிழிட்டுக் கொண்டிருக்குமாறு உள்ள அமைப்பு. குளத்தைச் சுற்றிலும் சற்று அகலமான நடைபாதை உள்ளது. பல இடங்களில் 3,4 பேர் அமர்ந்துகொண்டு தண்ணீரைப் பார்த்தவண்ணம் இருப்பதற்கேற்ப மரத்தாலான இருக்கை வசதிகள். பலர் நடந்து கொண்டு இதில் கற்றுவார்கள். ஒரு சிலர் ஓடிக் கொண்டும் சுற்றுவார்கள். சிலர் குழந்தைகளைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டும் சுற்றுவார்கள். (படம் - 6)


  1. Captain Tilley Park. யாரோ ஒருவர் பெயரால் இது நிறுவப் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது