பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

என் சரித்திரம்

உடையாளூர், நல்லூர் என்னும் இடங்களிலிருந்து பந்துக்களும் அன்பர்களும் வந்திருந்தார்கள்.

உபநயன காலங்களில் நடைபெறும் ஊர்வலம் விநோதமானது. பெரும்பாலும் வாகனங்களில் அது நடைபெறாது. உபநயனப் பையன் தன் அம்மான் தோளில் ஏறிக்கொள்வான் பெண்களும் ஆண்களும் புடைசூழ வாத்திய கோஷத்துடன் ஊர்வலம் செல்லும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அம்மான் நிற்பார். வீட்டிலுள்ள பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த தாம்பாளத்தில், ஊர்வலத்துடன் செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டுசெல்லும் பக்ஷியங்களையும் தாம்பூலத்தையும் வைத்துப் போவார்கள் இப்படி ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும். இவ்வூர்வலம் என் உபநயனத்திலும் நடந்தது.

எங்கள் குடும்ப வழக்கப்படி உபநயன காலத்தில் எனக்கு ‘வேங்கடராம சர்மன்’ என்று நாமகரணம் செய்யப்பட்டது. அந்தப் பெயரே நன்றாக உள்ளதென்று என் தகப்பனாரும் பிறரும் எண்ணினர். அது முதல் எனக்கு வேங்கடராமனென்ற பெயரே பலரால் வழங்கப்பட்டு வந்தது.

உபநயன காலத்தில் நான் யஜூர் வேதத்தை அத்தியயனம் செய்வதற்கு உரியவ னென்றும், வாதூல கோத்திரத்தின னென்றும், ஆபஸ்தம்ப சூத்திரத்தைக் கடைப்பிடிப்பவ னென்றும் உணர்ந்தேன்.

பூணூல் அணிந்து துவிஜனாகிய புதிதில் எனக்கு என் அம்மான் சிவராமையர் மந்திரங்களை யெல்லாம் கற்பித்தனர். சந்தியா வந்தனங்களைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துவந்தேன். மந்திரஜபம் செய்வதில் எனக்கு இயல்பாகவே விருப்பம் உண்டு.

கௌரீ மந்திரம்

உபநயனம் ஆனபிறகு மீண்டும் நாங்கள் அரியிலூர் வந்து சேர்ந்தோம். நான் தமிழ்க் கல்வியிற் சுவை கண்டேனாதலால் சடகோபையங்காரை விடாமற் பற்றிக்கொண்டேன்.

ஒரு சமயம் என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எங்களைப் பார்ப்பதற்காக அரியிலூருக்கு வந்தார். சிலர் கேட்டுக்கொண்டபடி சில தினங்கள் நாங்கள் இருந்த வீட்டில் ஹாலாஸ்ய மாகாத்மியம் வாசித்துப் பொருள் சொல்லி வந்தார். நான் தினந்தோறும் அதைக் கேட்டு வந்தேன். ஸ்ரீ சோமசுந்தரகக் கடவுள் கௌரி என்னும் பெண்ணுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் ஒன்று அந்த மாகாத்மியத்தில் இருக்கிறது. தமிழ்த் திருவிளையாடற்