பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் கல்யாணம்

பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

போஜனக் கிரமம்

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன

காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்-