பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

என் சரித்திரம்

களத்தூருக்கே வந்து சேர்ந்தோம். நான் மஞ்சள் வேஷ்டியணிந்த கல்யாணக் கோலத்துடன் குன்னம், கார்குடி முதலிய இடங்களில் உள்ளவர்களின் விருப்பப்படி அங்கங்கே சென்று பெரியோர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு கிருகஸ்தனாகிய அக்கோலத்தைக் கண்டு சந்தோஷமடைந்தவர்களுள் முதல்வர் என் அன்னையார். என் தந்தையார் என் கல்யாண விஷயத்திற்பட்ட சிரமத்திற்கு அளவில்லை. ஆதலின் “நல்ல காரியத்தை விரைவில் நன்றாக நிறைவேற்றினோம்” என்ற திருப்தியினால் அவர் உத்ஸாகம் பெற்றிருந்தார்.

ஒரே நாட்டம்

கல்யாணத்திற்குச் சிலநாள் முன்பிருந்து கல்யாணமான பிறகு சிலநாள் வரையிலும் எனக்கும் ஒரு புதிய உத்ஸாகம் இருந்தது. பார்க்க வேண்டியவர்களை யெல்லாம் பார்த்துவிட்டு ஒருவாறு அமைதிபெற்ற பின்பு அந்த உத்ஸாகம் என்னிடமிருந்து நழுவி விட்டது. நான் கிருகஸ்தனாகிவிட்டதனால் என்னிடம் புதிய அபிவிருத்தி ஏதும் உண்டானதாகத் தெரியவில்லை. கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும் ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோற்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம். தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப்பசிக்கு உணவு; எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும்சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.

அத்தியாயம்—23

ஏக்கமும் நம்பிக்கையும்

ளத்தூரில் இருந்தபோது எங்களுக்கு வந்த தானியங்களில் கம்பு முதலியன அதிகமாகவும் நெல் குறைவாகவும் இருந்தன. கம்பு முதலியவற்றைக் கொடுத்துவிட்டு நெல்லாக மாற்றிக்கொள்வது வழக்கம்.