பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

என் சரித்திரம்

இப்போதுதான் இவனுக்குக் கல்யாணம் நடந்தது. அதற்கு அதிகப்பணம் செலவாகிவிட்டது. இப்படி இருக்கையில் மேலும் எப்படி என்னால் பணம் செலவு செய்ய முடியும்?” என்றார் தந்தையார்.

“என்னவோ, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பிள்ளையவர்களைத் தவிர இவருக்குத் திருப்தி உண்டாகும்படி பாடம் சொல்வோர் வேறு யாரும் இல்லை. யோசித்துக்கொண்டு செய்யுங்கள்” என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர்பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகிவிட்டது. கடவுள் திருவருள் கைகூட்டுமோ என்று ஏங்கலானேன்.

நம்பிக்கை உதயம்

ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறுசார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.

நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறுசார்த்தச் செய்து, புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி ௵ பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன்.