பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

என் சரித்திரம்

எனக்குப் பாடம் சொல்வதும் நான் படிக்கும் நூல்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதும் அவருக்குப் புதிய வேலைகள். அவை அவர் உள்ளத்துக்கு உவப்பான காரியங்கள். என்னிடம் அவர் மிக்க அன்பு வைத்திருந்தார். எனக்கும் அவருக்கும் பிராயத்திலும் அறிவிலும் செல்வத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. எனினும், தமிழனுபவத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம். நாள் முழுவதும் தமிழைப்பற்றி அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.

அவ்வப்போது படித்து வந்த நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறளை எப்போதும் கையில் வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. ரெட்டியாரிடம் இருந்த புஸ்தகத்தைப் படித்து வந்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு புஸ்தகமிருந்தால் எங்கே போனாலும் வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று நினைத்தேன். அச்சுப் புஸ்தகத்தைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்க இயலாதவனாக இருந்தேன். பெரும்புலியூர்ப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயராக இருந்த ராயரொருவர் திருக்குறள் உரைப் புஸ்தகம் தம்மிடம் இருப்பதாகவும் பெரும்புலியூர் வந்தால் எனக்கே தருவதாகவும் குன்னத்தில் வாக்களித்தது அப்போது ஞாபகத்திற்கு வந்தது. “இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது” என்ற கருத்தால் பெரும்புலியூர் சென்று அதை அவரிடம் வாங்கி வர நிச்சயித்து எனது எண்ணத்தை ரெட்டியாரிடம் தெரிவித்தேன். அவர், “நானும் வருகிறேன். பேசிக்கொண்டே போய் வரலாம்” என்றார். அவர் என்னோடு பெரும்புலியூருக்கு நடந்து வருவதாகக் கூறியதைக் கேட்டபோது எனக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று.

பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தார். ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது எனக்குப் பேரானந்தத்தை உண்டாக்குகின்றது. இது பெரிய புண்ணியம். தமக்குப் பாடம் சொல்பவர் ஒருவரும் இல்லையே என்று குன்னத்தில் இவர் தவித்துக்கொண்டிருந்தார். இவருக்கு உங்களுடைய பழக்கம் கிடைத்தது அதிர்ஷ்டமே” என்று ராயர் பாராட்டிப் பேசினார். முன்பு வாக்களித்திருந்தபடி தம்மிட-