பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அவரிடம் போங்கள்’

இவ்வாறு பிள்ளையவர்களைப் பற்றிய பிரஸ்தாபம் வரும் சமயங்களில் நான் ஆவலாகக் கேட்பேன். மேலும் விஷயங்களை விசாரிப்பேன். நான் அவர்களிடம் படிக்க வேண்டுமென்று எண்ணியதையும் திருவிளையாடற் புராணத்திற் கயிறுசார்த்திப் பார்த்ததையும் சொல்லியிருந்தேன். இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்குத் திருப்தியுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். பலரிடம் இக்கருத்தையுடைய வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு ஏங்கிய எனக்கு ரெட்டியாருடைய வார்த்தைகள் பின்னும் உறுதியை உண்டாக்கின.

ரெட்டியார் என்னிடம் சொல்வதோடு நில்லாமல் என் தந்தையாரிடமும் இக்கருத்தை வெளியிட்டார்: “என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டாம். நீங்கள் எவ்வளவு வருஷம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற திருப்தியைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” என்று அவர் கூறிப் பின்னும் பலமுறை வற்புறுத்தினார்.