பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

என் சரித்திரம்


வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படி சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடஸூப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.

“வேங்கடஸூப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸூப்ரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில்கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன்.

பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன்.