பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

என் சரித்திரம்

“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான் இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான் “பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நிகண்டை மனனம் செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய்விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்