பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

என் சரித்திரம்

கேட்கவில்லையாதலால் எனக்கு அவருடைய போதனை அதிக இன்பத்தை உண்டாக்கியது. அவர் பாடம் சொல்லும்போது எனக்கு எந்தச் சொல் விளங்காதோ அதற்கு மாத்திரம் பொருள் சொல்வார்; எனக்கு எந்த விஷயம் தெரியாதோ அதை மாத்திரம் விளக்குவார்.

சில பாடல்கள் ஆனவுடன், “இன்னும் சில தினங்களில் இந்த நூலை முடித்துவிடலாம். பிறகு வேறு ஒரு நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டு, “அப்பா சவேரிநாது” என்று கூப்பிட்டார். அவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அங்கே வந்தார்.

“நாளை முதல் இவருக்கு நைடதத்தைப் பாடம் சொல்லி வா” என்று அவருக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே மறு நாள் முதல் நான் அம்மாணாக்கரிடமே பாடங் கேட்டு வரலானேன்.

சவேரிநாத பிள்ளை

சவேரிநாத பிள்ளை என்பது அவர் பெயர். அவர் ரோமன் காதொலிக் கிறிஸ்தவர்; பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வந்தார். அவரைப் பார்த்தால் யாரும் கிறிஸ்தவரென்று சொல்லார். விபூதி அணிந்திருப்பார். பிள்ளையவர்களிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டு. ஆசிரியருடைய குடும்பக் காரியங்களெல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். எப்போதும் உத்ஸாகமுள்ளவராகவே இருப்பார்; வேடிக்கையாகப் பேசுவார். எவ்வளவு துக்கமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் தம்முடைய பேச்சால் அந்த நிலையை மறக்கச் செய்வார்; சிநேகம் செய்வதற்கு யோக்கியமானவர்; தமிழ்ப் பாடலிலுள்ள பொருள்களை ரஸமாக எடுத்துச் சொல்வார்; அடிக்கடி வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவரோடு சேர்ந்து இருந்தால் பொழுதுபோவதே தெரியாது.

நான் அவரிடம் பாடங் கேட்டபொழுது அவருடைய கல்வி ஆழமானதன்று என்ற எண்ணமே எனக்கு முதலிற்பட்டது. அதனால், அவர் பாடஞ் சொல்லும்போது சமற்காரமாக அவர் கூறும் விஷயங்களை அனுபவிக்க முடியவில்லை. இனிமையாகப் பொழுதுபோவதை நான் விரும்பவில்லையே. அதிகமாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே விரும்பினேன். நைடதம் முன்னமே படித்த நூல்தானே? அதை மீட்டும் அவரிடம் கேட்கும்போது அவர் ரஸமாகச் சொன்னாலும், நான் அறியாத கருத்தையோ, இலக்கணத்தையோ அவர் விளக்காமையால் எனக்கு இன்பமுண்டாகவில்லை. சில இடங்களில் நான் அறிந்த விஷயம்கூட அவருக்குத் தெரியவில்லை.