பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன புண்ணியம் செய்தேனோ!

189

சொல்ல வாயெடுப்பேன்; சட்டென்று மாற்றிக்கொண்டு ‘சாமிநாதன்’ என்பேன். நாளாக ஆகப் புதிய பெயரே வழக்கில் வந்தது.

விளையாட்டு வேலைகள்

பிள்ளையவர்கள் வீடு பழையது. ஆகையால் அதற்குப் புதிதாக ஓடு மாற்றினார்கள். அப்போது அப்புலவர்பிரான் அருகிலிருந்து கவனித்து வந்தார். தாமே ஓடுகளை வாங்கி வாங்கிக் கொடுத்தார். பார்த்த நானும் ஓடுகளை வாங்கிக் கொடுத்தேன். “இந்த வேலையெல்லாம் உமக்குப் பழக்கம் இராது” என்று அவர் சொன்னார். “எனக்கா? நான் கிராமங்களிலே பழகினவன். அம்மாதிரி வேலைகளை யெல்லாம் நன்றாகச் செய்வேன்” என்று சொல்லி அவரைச் சிரமப்படாமல் இருக்கச் செய்து அவ்வேலையை நான் கவனித்தேன். மூங்கிற் பிளாச்சுகளை வெட்டிக் கொடுத்தேன். என்னுடன் சவேரிநாத பிள்ளையும் அவ்வேலையைச் செய்தார்.

தோட்டத்தில் கிணறு ஒன்று புதியதாக வெட்டப்பட்டது. அப்போது கிணற்று ஜலத்தை வாங்கிக் கொட்டுவதற்காக வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்கள் சென்றார். ஒரு குடம் வாங்கிக் கொட்டுவதற்குள் வேர்த்துப் போய்விட்டது. அவர் தம் தொந்தி குலுங்கத் தளர்ந்த உடம்புடன் அவ்வாறு செய்வதைக் கண்டவுடன் நான் ஓடிச் சென்று அக்குடத்தை வாங்கிக்கொண்டேன். “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி ஜலத்தை வாங்கிக் கொட்டினேன். இத்தகைய காரியங்களைச் சோம்பலில்லாமல் நான் செய்தேன். படிப்பிலேயே பொழுது போக்கிய எனக்கு இவ்வேலைகள் இடையிடையே விளையாட்டைப் போலிருந்தன. சிரமம் தோன்றாமல் சந்தோஷத்துடன் செய்யும் காரியம் எதுவாயிருந்தாலும் அது விளையாட்டுத்தானே?

“சாமிநாதையர் சுறுசுறுப்பாக இருக்கிறார். எல்லா வேலைகளும் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்று பிள்ளையவர்கள் என்னைப் பாராட்டுவார். அப்பாராட்டு உண்மையன்போடு வெளிவருவதாதலின் என் உள்ளத்தைக் குளிர்விக்கும்.

பயனுள்ள பழக்கங்கள்

பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்துகொண்டே இருப்பார்கள்; பிரபுக்கள் வருவார்கள்; வித்துவான்கள் வருவார்கள்; அப்போது நானும் மற்ற மாணாக்கர்களும்