பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

என் சரித்திரம்

அன்று என் ஆசிரியர் வழக்கம்போல் மத்தியான்ன போஜனம் ஆன பிறகு படுத்துக்கொண்டிருந்தார்.

கூறை நாடு மாயூரத்திலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கும். அவர் துயிலும் சமயமறிந்து நான் கூறை நாட்டுக்கு மிகவும் வேகமாக ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். எப்படியாவது கனகசபை ஐயரிடமிருந்து சீகாழிக் கோவைப் பிரதியை வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றேன். அவரிடம் நயந்து கேட்டு அதை வாங்கினேன். பிள்ளையவர்கள் விழித்துக்கொள்வதற்குள் வந்துவிடவேண்டுமென்று ஒரே ஓட்டமாக மாயூரம் வந்துவிட்டேன். அப்போது ஒரு மணியிருக்கும். அந்த வெயிலின் வெம்மையும் இரண்டு மைல் தூரம் வேகமாகப் போய் வந்த களைப்பும் கோவைப் பிரதி கிடைத்த சந்தோஷத்தில் தோற்றவில்லை.

பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டபோது நான் சுவடியும் கையுமாக எதிரில் நின்றேன். “என்ன புஸ்தகம் அது?” என்று கேட்டார் அவர்.

“சீகாழிக் கோவை.”

“ஏது?”

“கனகசபை ஐயருடையது.”

“எப்போது வாங்கி வந்தீர்?”

“இப்போதுதான்.”

“இந்த வெயிலில் ஏன் போக வேண்டும்? அவர் லேசில் தரமாட்டாரே! என்னிடம் சொல்லியிருந்தால் நான் வருவித்துக் கொடுத்திருப்பேனே.”

அக்கோவையைப் பாடங் கேட்க வேண்டுமென்றிருந்த வேகம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியதென்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஆதலின் அதை உடனே பாடம் சொல்லத் தொடங்கினார்.

சீகாழிக் கோவையென்னும் பிரபந்தம் பிள்ளையவர்களாலே இயற்றப் பெற்றது. அவர்களுடைய நண்பராகிய வேதநாயகம் பிள்ளை சீகாழியில் முன்சீபாக இருந்த காலத்தில் என் ஆசிரியர் அங்கே சென்று சில காலம் வசித்தார். அப்போதுதான் அக்கோவையை அவர் இயற்றினார். மற்றக் கோவைகளைக் காட்டிலும் அது சிறிது விரிந்த அமைப்புடையது.