பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

என் சரித்திரம்

குலந்தவிரச் செய்” என்பதையும், எனக்கு, “கந்தா கடம்பாகு கா” என்பதையும் கொடுத்தார். நாங்கள் யோசித்து நிதானமாக ஒருவாறு வெண்பாக்களைப் பூர்த்தி செய்தோம்.

எனக்காகப் பிரார்த்தனை

நாங்கள் மூவரும் இந்த மூன்று வெண்பாக்களையும் சொன்னோம். கேட்ட அவர், “நானும் ஒரு பாடல் முடித்திருக்கிறேன்” என்று சொல்லி,

“பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு
கூடக் கருணை கொழித்தருள்வாய்-தேடவரும்
மந்தா நிலந்தவழு மாயூர மாநகர்வாழ்
கந்தா கடம்பாகு கா”

என்று அந்த வெண்பாவையும் சொன்னார். “நம்மோடு சேர்ந்து நமக்கு ஊக்கத்தை உண்டாக்குவதற்காகத் தாமும் ஒரு செய்யுளை இயற்றிச் சொல்லுகிறார்” என்பதை நான் உணர்ந்தேன். தமிழை இன்பந் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்த அப்பெரியார் எங்களுக்கும் தமிழ்க் கல்வியை விளையாட்டாகவே போதித்து வந்தார். பிள்ளைகளுக்கு உத்ஸாக மூட்டுவதற்காகத் தந்தை அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லையா? அதைப் போல அவரும் எங்களுடன் சேர்ந்து செய்யுள் இயற்றினார்.

எங்கள் மூவருக்கும் அவர் கூறிய செய்யுளைக் கேட்டவுடன் ஆனந்தமுண்டாயிற்று. எனக்கு ஒருபடி அதிகமான சந்தோஷம் ஏற்பட்டது. என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த சமஸ்யையையல்லவா தம்முடைய பாட்டிற்கு ஈற்றடியாகக் கொண்டார்? அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா? அது மட்டுமா? அப்பாட்டு ஒரு கவியினது பாட்டாக இருந்தாலும் பொருளமைப்பில் ஒரு மாணாக்கனது பிரார்த்தனையாக வல்லவோ இருக்கிறது? ‘பாடவும் படிக்கவும் அன்பு கூடவும்’ எல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியவர்களே. ஆயினும் என் ஆசிரியர் அத்தகைய பிரார்த்தனையை எவ்வளவோ காலத்திற்கு முன் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர். ஆகையால் அப்போது அந்தப் பிரார்த்தனையை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. குழந்தைக்காகத் தாய் மருந்தை உண்பதுபோல, பாடவும் படிக்கவும் அன்பு கூடவும் வேண்டுமென்று மாயூர நகர் வாழும் கந்தனை நான் பிரார்த்திப்-