பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—34

புலமையும் வறுமையும்

சூரிய மூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும், மாதா மகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடை பெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய லாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரிய புராணத்தை ஆரம்பித்துப் பாடம் சொல்லி வந்தார்.

பெரிய புராணப்பாடம்

தஞ்சை ஜில்லாவில் சில முக்கியமான தேவஸ்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் ஸ்ரீ மாயூரநாதர் கோயிலும் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயமும் அவ்வாதீனத்துக்கு உட்பட்டவை. ஆதீன கர்த்தராகிய பண்டார சந்நிதிகளின் பிரதிநிதியாக இருந்து அவர்கள் கட்டளைப்படி தேவஸ்தானங்களின் விசாரணையை நடத்தி வரும் தம்பிரான்களுக்குக் கட்டளைத் தம்பிரான்கள் என்றும், அத்தம்பிரான்கள் தம் தம் வேலைக்காரர்களுடன் வசிப்பதற்காக அமைந்திருக்கும் கட்டிடங்களுக்குக் கட்டளை மடங்களென்றும் பெயர் வழங்கும். மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதியாகப் பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவர் மாயூரம் தெற்கு வீதியில் உள்ள கட்டளை மடத்தில் இருந்து கோயிற் காரியங்களை நன்றாகக் கவனித்து வந்தார். அவர் தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர். அவர் இருந்த கட்டளை மடம் பிள்ளையவர்கள் விடுதிக்கு அடுத்ததாதலால் அடிக்கடி அங்கே சென்று அவருடன் சல்லாபம் செய்து வருவார். அவருக்குப் பிள்ளையவர்களிடம் பெரிய புராணம் பாடம் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்தமையால் அவ்விதமே தொடங்கி முதலிலிருந்து பாடம் கேட்டு வந்தார். வேறு முதியவர் சிலரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். சவேரிநாத பிள்ளையும் கேட்டு வந்தனர்.

நான் சூரிய மூலையிலிருந்து வந்த காலத்தில் எறிபத்த நாயனார் புராணத்துக்கு முந்திய புராணம் வரையில் நடைபெற்றிருந்தது. நான் வந்த தினத்தில் அப்புராணம் ஆரம்பமாயிற்று. பெரிய புராணத்தை நான் அதற்கு முன் பாடம் கேட்டதில்லை.