பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

என் சரித்திரம்

உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடஞ் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.

வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை. “பெரிய கவிஞர். தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர். தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர். ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர். சில நாள் நெய் இல்லாமல் உண்டார். ஒருவேளை கட்டளை மடத்தில் உண்ட உணவு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.

‘எண்ணெய் இல்லை’

ஒரு நாள் காலையில் அவர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி ஒரு பலகை போட்டுக்கொண்டு அதன் மேல் அமர்ந்தார். ஒரு வேலைக்காரன் அவருக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். அவன் உள்ளே சென்று தவசிப் பிள்ளையை எண்ணெய் கேட்டான். எண்ணெய் இல்லை.

என் ஆசிரியர் எந்தச் சமயத்திலும் பாடஞ் சொல்லும் வழக்கமுடையவராதலின் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்தபடியே பாடஞ் சொல்லத் தொடங்கினார். நானும் பிறரும் புஸ்தகத்தோடு அருகில் இருந்தோம். எண்ணெய் வருமென்று அவர் எதிர்பார்த்திருந்தும் பாடஞ் சொல்லும் ஞாபகத்தில் அதை மறந்துவிட்டார்.

நான் அதைக் கவனித்தேன். எண்ணெய் இல்லையென்பதை அறிந்துகொண்டேன். உடனே மெல்ல ஏதோ காரியமாக எழு-