பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவ்வளவு அதிகம்? எல்லாம் இந்த மகானை அடுத்ததனால் வந்த கௌரவமல்லவா?” என்று எண்ணினேன். “நாம் இவர்களிடம் வந்து சில மாதங்களே ஆயின. தமிழ்க் கடலின் ஒரு மூலையைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இவர்களிடமிருந்து பாடங் கேட்டு நல்ல அறிவை அடைந்தால் நமக்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்” என்ற நினைவினால் “என்ன கஷ்டம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்ற உறுதியை மேற்கொண்டேன்.

பஞ்சநதம் பிள்ளையின் செயல்

உடன் வந்தவர்கள் சிறிது தூரம் வந்து பிள்ளையவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்கள். எங்களுக்காக ஆறுமுகத்தா பிள்ளையவர்கள் கொணர்ந்திருந்த வண்டியில் அவரும் பிள்ளையவர்களும் ஏறிக்கொண்டனர். நான் ஏறப் போகும்பொழுது அங்கே நின்ற தவசிப் பிள்ளையாகிய பஞ்சநதம்பிள்ளை வெகுவேகமாக என்னிடம் வந்தார். என் கையிலிருந்த புதிய புஸ்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பிடுங்கினார். ‘எனக்கு வேண்டுமே’யென்று நான் சொன்னபொழுது, “இவ்வளவும் உமக்கு எதற்கு? ஒவ்வொன்று இருந்தால் போதாதோ?” என்று சொல்லி ஒவ்வொரு பிரதியை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை அவர் வைத்துக்கொண்டார். சுப்பிரமணிய தேசிகரிடம் நான் முதன்முதலாகப் பெற்ற பரிசல்லவா அவை? பஞ்சநாதம் பிள்ளை அவற்றைப் பறித்தபோது அவர் கன்னத்தில் இரண்டு அறை அறைய வேண்டுமென்ற ஆத்திரம் எனக்கு முதலில் உண்டாயிற்று. அவரிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டுமென்று பிள்ளையவர்கள் எனக்கு எச்சரிக்கை செய்ததை நான் மறக்கவில்லை. ஆதலால் ஒன்றும் பேசாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு வண்டியில் ஏறினேன்.

காலை முதல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் தமிழறிவின்பால் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் முதல் தம்பிரான்கள் காரியஸ்தர்கள் வரையில் யாவரும் வைத்திருக்கும் மதிப்பையும் மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அறிந்து வியந்த நான், அவ்வளவு பேர்களுக்கு இடையில் சிறிதேனும் மரியாதை தெரியாமலும் தமிழருமையை அறியாமலும் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பஞ்சநதம் பிள்ளையினது இயற்கையைக் கண்டபோது, “ஆயிரம் வருஷங்கள் நல்லவர்களோடு பழகினாலும் தம் இயல்பை விடாதவர்களும் உலகில் இருந்துதான் வருகிறார்கள்” என்று சமாதானம் செய்துகொண்டேன்.

இரட்டைமாடு பூட்டிய அந்த வண்டி சாலையில் வேகமாகப் போகத் தொடங்கியது.