பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கொடுத்த வரம்

220

களைச் செய்து நல்ல பெயர் பெற்றார். திருவாவடுதுறை யாதீனத்தின் விசாரணைக்கு உட்பட்டுப் பல ஆலயங்கள் இருப்பதால் ஓர் ஆலயத்தில் இருந்து நிர்வாகம் செய்த தம்பிரானை வேறோர் ஆலயத்துக்கு மாற்றுவதும் சிலரை மடத்தின் அதிகாரிகளாக்கி அவர்கள் ஸ்தானத்திற் புதிய தம்பிரான்களை நியமிப்பதும் ஆதீனத்து வழக்கம். திருவிடைமருதூரில் கட்டளைத் தம்பிரானாக இருந்த முற்கூறிய சுப்பிரமணியத் தம்பிரானை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தைச் சேர்ந்த ஆளுடையார் கோயிலின் நிர்வாக அதிகாரியாக மாற்றினார். அவர் அங்கே சென்றபின் இடையே சில காலம் ஒரு தம்பிரான் இருந்து திருவிடைமருதூர் ஆலய விசாரணையைக் கவனித்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் பூஜை, போஜனம் செய்துகொண்டும் படித்துக்கொண்டும் இருந்துவரும் சில தம்பிரான்களுக்கு மடத்தில் ஏதேனும் உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகும். அதனை அறிந்து ஆதீனத் தலைவர் இடையிடையே சமயம் நேரும்போது சில மாதங்கள் அவர்களைக் கட்டளை முதலிய வேலைகளில் நியமிப்பது வழக்கம். நாங்கள் போனபோது திருவிடைமருதூரில் இருந்த தம்பிரான் அத்தகையவர்களில் ஒருவர்.

சுப்பையா பண்டாரம் என்னை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் கொட்டாரத்தின் முகப்புத் திண்ணையில் கட்டளைத் தம்பிரான் ஒரு திண்டின் மேல் சாய்ந்தபடி வீற்றிருந்தார். கொட்டாரமென்து நெல் முதலிய தானியங்கள் சேர்த்து வைக்குமிடம். அவருக்கு ஒரு புறத்தில் உத்தியோகஸ்தர்கள் நின்றிருந்தனர். கணக்கெழுதும் ஏடுகளுடன் சில காரியஸ்தர்கள் பணிவோடு நின்றனர்.

தம்பிரானுடைய விபூதி ருத்திராட்ச தாரணமும் காவி உடையும் தோற்றப் பொலியும் அவர்பால் ஒரு மதிப்பை உண்டாக்கின. அவர் சடை மிகவும் பெரிதாக இருந்தது. கட்டளை, காறுபாறு முதலிய உத்தியோகங்களைப் பார்க்க விரும்பிச் சில தம்பிரான்கள் மிக்க நிர்வாகத் திறமையுடையவர்கள்போலக் காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வர்க்கத்தைச் சேர்ந்த அத்தம்பிரான் அடிக்கடி தமது மார்பைப் பார்த்துக்கொண்டும் நிமிர்ந்த முகத்திலும் உரத்த குரலிலும் அதிகார முடுக்கைக் காட்டிக்கொண்டும் இருந்தனர்.

சுப்பையா பண்டாரம் என்னை அழைத்துச் சென்று தம்பிரான் முன்னேவிட்டு அஞ்சலி செய்தார். தம்பிரான், “எங்கே வந்தீர்? இவர் யார்?” என்று கேட்டபோது, “பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள். என் ஜாகையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இவர் படித்து வருகிறார். இவருக்கு இங்கே மடைப்பள்ளியில்