பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யான் பெற்ற நல்லுரை

239

“என்ன? பட்டீச்சுரத்துக்கு அந்தாதியா? நான் படித்ததில்லையே! எங்கே உங்களுக்கு ஞாபகம் இருந்தால் ஒரு பாடல் சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார் செட்டியார்.

ஆறுமுகத்தாபிள்ளை உடனே அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார் அதைச் செட்டியார் கேட்டார்; கேட்டபின் ஆறுமுகத்தா பிள்ளையையும் ஆசிரியரையும் ஏற இறங்கப் பார்த்தார்; “இந்தப் பாட்டு பிள்ளையவர்கள் செய்ததென்று எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“ஏன் தெரியாது? எங்கள் ஊர்ப் பிரபந்தத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? எங்கள் தகப்பனார் காலத்தில் ஐயா இயற்றியது இது.”

“இப்புஸ்தகம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் யாருக்கும் சொல்லாமல் கிழித்து ஆற்றிலே போட்டுவிடுங்கள். நீங்களும் அப்பாடல்களை மறந்து விடுங்கள்; ஐயா இப்படி ஒரு நூல் இயற்றியதாக யாரிடத்திலும் இனிமேற் பிரஸ்தாபம் செய்யவேண்டாம்”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”

“ஏனா? இப்போது ஐயா செய்கிற பாடல்களைக் கேட்டவர்களிடம் இப்பாடல்களைப் பற்றிச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். உங்களுக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள். இப்போதெல்லாம் ஐயா செய்யும் பாடல்கள் எவ்வளவு ‘தங்கந் தங்கமாக’ இருக்கின்றன! பூசை வேளையிற் கரடியைவிட்டு ஓட்டினாற்போல நல்ல நல்ல பாடல்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் இப்பாட்டைச் சொல்ல வந்துவிட்டீர்களே!”

ஆறுமுகத்தா பிள்ளை சொன்ன செய்யுள் நன்றாகவே இருந்தது.

[1]“வரைமா திருக்கு மொருகூறும்
    மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும்
    அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமறை
    மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை
     நகரி லருளப் பெற்றேனே”


  1. வரைமாது - பார்வதி தேவியார், அரை - இடை, அதள்-தோள், விரை - வாசனை, பழைசை - பழையாறு; பட்டீச்சுரம் அதனைச் சார்ந்ததே