பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

என் சரித்திரம்

புஸ்தகம் மறைந்த மாயம்

ஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடங் கேட்கத் தவறிவிட்டேன்; எல்லோரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை. விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வழக்கம்போல் பாடங் கேட்க எண்ணி முதல்நாள் இரவு புஸ்தகம் வைத்த இடத்திலே போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப் புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில் அப்புஸ்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது படிக்கலாமென்று எண்ணி என் புஸ்தகக்கட்டு இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன கஷ்டங்களை விளைவிக்குமோ!” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே!” என்று வருந்தினேன்.

வாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புஸ்தகங்களைக் காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த விஷயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை. அவர் எப்பொழுதும் எட்டுமணி வரையில் தூங்குவார். எட்டுமணியளவில் கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி” என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று “ஏன்?” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து வெளியே வருவார். தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும் சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ்நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே!

ஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின் முகத்தில்தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இவ்வளவு ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்துகொண்டு விழிக்கும் ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புஸ்தகத்தைக் காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை நான் அறிவேன். ஆகையால் அவரிடம்