பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலேடையும் யமகமும்

257

விஷயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு மிக்க கோபம் உண்டாகி விட்டது. “நீர் வைஷ்ணவரா? இந்த விரதத்தை எல்லாம் உங்களூரில் வைத்துக்கொள்ளும். இந்த எல்லைக்குள் அப்படிச் செய்யக் கூடாது. சைவர்களாகிய எங்களோடு பழகும் உமக்கு இப்படிப் புத்திபோனது ஆச்சரியம்” என்று கண்டிக்க ஆரம்பித்தார். அன்றியும் நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டிற்கு, நான் கோபாலம் எடுத்து வந்தால் உணவு அளிக்க வேண்டாமென்று சொல்லியனுப்பிவிட்டார். நான் என்ன செய்வேன்! பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிடக்கூடாதென்றும், அதனால் பெருந்தீங்கு நேருமென்றும் நான் நம்பியிருந்தேன். எங்கள் குல தெய்வமாகிய ஸ்ரீ வேங்கடாசலபதியை நினைந்து மேற்கொள்ளும் அந்த விரதத்திற்கு பங்கம்நேர்ந்தால் குடும்பத்திற்கே துன்பம் வருமே என்று அஞ்சினேன். அத்தகைய நம்பிக்கையுள்ள குடும்பத்திற் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த எண்ணம் மிகவும் பலமாக இருந்தது. அன்று மத்தியான்னம் நான் உணவு கொள்ளவே இல்லை. தென்னந்தோப்பிற் சென்று கீழே படுத்துப் பசியினால் புரண்டேன். இத்தகைய துன்பங்களுக்கு ஆளாக்கிய என் விதியை நொந்துகொண்டேன்.

நான் உண்ணவரவில்லை என்று தெரிந்து எனக்கு ஆகாரம் அளிக்கும் வீட்டினர் மிகவும் வருந்தினர். அவர்கள் அங்கே வந்து என்னை கண்டு வற்புறுத்தினமையால் அன்று பிற்பகலில் ஐந்து மணிக்குப் போய் உணவருந்தினேன். புரட்டாசி மாதச் சனிக்கிழமை விரதத்திற்கு அந்த ஊரில் விடை கொடுத்துவிட்டேன்.

மாயூரத்தில் இருந்தபோது இத்தகைய துன்பம் நேரவில்லை. அன்றியும் சவேரிநாத பிள்ளையின் பழக்கம் எனக்கு மிக்க இன்பத்தை அங்கே உண்டாக்கும். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசும் பேச்சு எவ்விதமான வருத்தத்தையும் போக்கிவிடும். பட்டீச்சுரத்திலோ மனம்விட்டுப் பேசி மகிழ்வதற்குரிய நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை.

சவேரிநாத பிள்ளை வரவு

இப்படியிருக்கையில், நல்லவேளையாக ஆசிரியர் சவேரிநாத பிள்ளையை அழைத்துவரும்படி மாயூரத்திற்குச் சொல்லியனுப்பினார். அவர் பட்டீச்சுரம் வந்தபோது எனக்கு எவ்வளவு சந்தோஷம் உண்டாயிற்று என்பதை எழுதி உணர்த்துவது இயலாது. “இனிமேல் ஆறுதலாகப் பேசி மகிழலாம்” என்று எண்ணினேன்.

சவேரிநாத பிள்ளை வந்தவுடனே ஒரு பெரிய காரியத்தைச் சாதித்தார். ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஆகாரம்செய்து வந்த வழக்கம் அவரது முயற்சியால்

என்-17