பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாவடுதுறைக் காட்சிகள்

263

அவ்வளவு அருமையான அபிப்பிராயத்தைச் சிறிதேனும் யோசனையில்லாமல் சொல்ல முன்வந்த அந்தப் பேர் வழி யாரென்று அறிய எனக்கு விருப்பம் உண்டாயிற்று. அவர் போனவுடன் நான் விசாரித்தேன். பாவம்! அவருக்கு இங்கிலீஷூம் தெரியாது; ஸம்ஸ்கிருதமும் தெரியாது; தமிழ் தெரியவே தெரியாது ஆகவே அவர் கருத்துப்படி அவரே இகபர சுகத்துக்கு வேண்டியதைத் தேடவில்லையென்று தெரிய வந்தது ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ!’ என்று யோசனை இல்லாமலும், பிறர் மனம் புண்படுமே என்பதைத் தெரிந்துகொள்ளாமலும், தமக்கு இந்த அபிப்பிராயத்தைக் கூற என்ன தகுதி இருக்கிறதென்று ஆலோசியாமலும் வாய்க்கு வந்ததை, “என் அபிப்பிராயம் இது” என்று சொல்லும் கனவான்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்குக் கோட்டூரில் கண்ட மனிதர் ஞாபகம் வரும்.

ஜ்வர நோய்

கோட்டூரில் ஒன்றரை மாதம் இருந்தேன். தீபாவளியான சில நாளில் எனக்குக் கடுமையான ஜ்வரம் வந்துவிட்டது. மிகவும் சிரமப்பட்டேன். அவ்வூரிலிருந்த சக்கரபாணி என்ற ஒரு பரிகாரி வைத்தியம் பார்த்தார். “கண்காணாமல் சௌக்கியமாக இருந்து வந்த குழந்தை இங்கே வந்தவுடன் நம்முடைய துரதிர்ஷ்டம் அவனையும் பிடித்துக்கொண்டது” என்று என் தாயார் அழுதார்.

தீபாவளிக்குப் பின் நான் மாயூரம் செல்லாமையால் என் ஆசிரியர் மிகவும் கவலைப்பட்டுக் கோட்டூருக்கு மனுஷ்யர்களை அனுப்பி விசாரித்து வரச்சொன்னார். நான் நோய்வாய்ப்பட்டது தெரிந்து பெரிதும் வருந்தினார். அடிக்கடி அவரிடமிருந்து யாரேனும் வந்து என் தேகஸ்திதியைப்பற்றி அறிந்துகொண்டு சென்றனர். “அன்பென்றால் இதுவல்லவா அன்பு!” என்று ஊரினர் ஆச்சரியப்பட்டனர்.

அத்தியாயம்—44

திருவாவடுதுறைக் காட்சிகள்


மார்கழி மாதக் கடைசியில் எனக்கு ஜ்வர நோய் முற்றும் நீங்கிற்று; ஆயினும் சிறிது பலக்குறைவு மட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம் போக வேண்டுமென்ற விருப்பம் வரவர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில்,