பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

என் சரித்திரம்

இந்தக் கிராமங்களினிடையே, சோம்பலை அறியாத ஜனங்களை உடையதாய், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், நிலமகள் தரும் வளத்தை யாவரும் பங்கிட்டு உண்ணுவதற்கும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் இடமாக விளங்கியது எங்கள் ஊர்.

உத்தமதானபுரம் ஒரு சிறிய கிராமந்தான்; ஆனாலும் அந்த ஊர் எங்கள் ஊர்; என் இளமைக் காலத்தின் இனிய நினைவுகளையும், விரிந்த உலகத்தை அறியாத என் இளங்கண்களுக்குக் கவர்ச்சியை அளித்த தோற்றத்தையும்கொண்ட என்னுடைய ஊர். வேறு எந்த ஊரும் நகரமும் என் உள்ளத்தில் அதன் ஸ்தானத்தைப் பெறுவதென்பது சாத்தியமா?

அத்தியாயம்—2

என் முன்னோர்கள்

“பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராஜா உதவி செய்ய வேண்டும்” என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போஜனம் செய்வித்து மிகுதியான தக்ஷிணையும் கொடுத்து அனுப்பினார்.

அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விஷயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக ராஜாவை ஏமாற்றி விசேஷமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போஜனம் செய் வித்தேனே!” என்றார்.

கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டுவிட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விஷயம் விளங்கியது.