பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

என் சரித்திரம்

நடப்பது போன்றே மாவிலைகளாலும் தோரணங்களாலும் வீடுகளையும் தெருக்களையும் அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களை வரவேற்று உண்பித்தனர். குரு பூஜை மடத்தில் மாத்திரம் நிகழ்வதன்று; திருவாவடுதுறைக்கே சொந்தமான திருநாள் அது. ஒரு வகையில் தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம். தமிழ் நாட்டிலுள்ள பலரும் அத்திருநாளில் அங்கே ஒன்று கூடி ஆனந்தமுற்றார்கள்.

ஸ்தல விசேஷம்

திருவாவடுதுறையிலுள்ள மடம் மிகச்சிறப்புடையதாயிருப்பது அவ்வூருக்கு முக்கியமான பெருமை. அதனோடு இயல்பாகவே அது தேவாரம் பெற்ற ஸ்தலம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தம் தந்தையார் செய்த வேள்விக்காக ஆயிரம்பொன் சிவபெருமானிடமிருந்து அத்தலத்திற் பெற்றனர். அதனால் அங்கே உள்ள தியாகராசமூர்த்திக்கு ஸ்வர்ணத் தியாகரென்ற பெயர் வழங்கும்.

ஸ்வாமியின் திருநாமம் மாசிலாமணியீசரென்பது; அம்பிகையின் திருநாமம் அதுல்யகுசநாயகியென்பது; ஒரு முறை அம்பிகை சிவாக்ஞையால் அங்கே பசுவடிவத்துடன் வந்து அங்குள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் அத்தலத்திற்குக் கோமுக்தி, கோகழியென்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற காலத்து அப்பிராட்டியைச் சிவபெருமான் அணைத்தெழுந்தாரென்பது புராணவரலாறு. அதற்கு அடையாளமாக அணைத்தெழுந்த நாயகரென்ற திருநாமத்தோடு ஒரு மூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார். உத்ஸவத்தில் தீர்த்தங் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே.

அத்தலத்தின் ஆலயத்தில் பல அரசமரங்கள் உள்ளன. அவை படரும் அரசு. மண்டபத்தின் மேலும் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தல விருக்ஷம் அந்த அரசே; அதனால் அதற்கு அரசவனம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன்மார்களுள் ஒருவருமாகிய திருமூலர் இத்தலத்தில் தவம்புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர். ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.

மடத்தைச் சார்ந்த ஓரிடத்தில் திருமாளிகைத்தேவரென்னும் சித்தருடைய ஆலயம் உண்டு. போகரின் சிஷ்யரும் திருவிசைப்பாப் பாடியவர்களுள் ஒருவருமாகிய அவர் ஒரு சமயம் அக்கோயில் மதில்களின் மேலுள்ள நந்தி உருவங்களையெல்லாம் உயிர்பெறச் செய்து ஒரு பகையரசனோடு போர்புரிய அனுப்பினாரென்பது பழைய வரலாறு. அது முதல் அவ்வாலய மதிலின்மேல் நந்திகளே இல்லாமற் போயினவாம்.