பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

என் சரித்திரம்

முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்பது. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீக்ஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்துப் பேசினார். கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித்தந்தால் சுப்பிரமணிய தேசிகரிடம் தாமே செய்ததாகச் சொல்லிச் சம்மானம் பெற அனுகூலமாகும் என்று சொன்னார். அக்கவிஞர்பிரான் உடனே சர்வசாதாரணமாக ஒரு பாடலை எழுதச்செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு போனார். ஆசிரியர் மறுபடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிஷமே மற்றொருவர் வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.

இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர் பிள்ளையவர்களிடம் பாடல் வாங்கிக்கொண்டு போய்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் ஸம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிகளை நான் சில நாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற்காலையில் எழுந்தபோதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை என்று தெரிந்தது.

புலவரும் புரவலரும்

பொழுதுவிடிந்தவுடன் அவர் அனுஷ்டானம் செய்துகொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் ஸ்நானம் முதவியவற்றை முடித்துக்கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு முகமலர்ச்சியும் அதன் மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள் அவரை வந்தனம் செய்துவிட்டுத் திருநீறிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.

“இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டார்கள்போல இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகிவிட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!” என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.