பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

என் சரித்திரம்

அன்றிரவு திருவாவடுதுறையில் தங்கியிருந்து மறுநாட்காலையில் நான் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சூரியமூலை போய்ச் சேர்ந்தேன். என் தந்தையார் முதலியவர்களிடம் குருபூஜைச் சிறப்பையும் ஆசிரியருடைய அன்புச் செயல்களையும் பற்றித் தெரிவித்தேன். கேட்டு அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

சூரியமூலையில் பத்து நாட்கள் வரையில் இருந்து பழைய பாடங்களைப் படித்து வந்தேன். அப்பால் ஒருநாள் தந்தையாரை அழைத்துக்கொண்டு மாயூரம் வந்தேன். பிள்ளையவர்கள் அங்கே இருந்தார்கள். என் தந்தையார் மாயூரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள் விடைபெற்றுச் சூரியமூலைக்குச் சென்றுவிட்டார்.

மாயூர நிகழ்ச்சிகள்

நான் மாயூரம் வந்தபோது பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளைக்கும் வேறு சிலருக்கும் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்களைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்திருந்தார். நால்வர் நான்மணி மாலை முதலிய சில பிரபந்தங்கள் நிறைவேறியிருந்தன. நான் போன சமயத்தில் பிக்ஷாடன நவமணிமாலை நடந்து வந்தது. அத்தமிழ்ப் பாடத்தில் நானும் கலந்துகொண்டேன். இடைவேளைகளில் முன்பு நடந்த பிரபந்தங்களையும் கேட்டு முடித்தேன். மத்தியில் ஆசிரியர் காரைக்காலில் இருந்த ஓர் அன்பர் விரும்பியபடி அவ்வூர் சென்று அப்படியே திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குப் போனார். மாயூரத்தில் என்னுடன் சவேரிநாத பிள்ளை இருந்து வந்தார்.

மாயூரத்தில் நான் சாப்பிட்டு வந்த விடுதிக்குக் கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க இயலாமையால் அங்கே ஆகாரம் செய்யப் போகவில்லை. ஆதலால் அரிசி முதலியவற்றைப் பெற்று நானே சமையல் செய்து சாப்பிடத் தொடங்கினேன். பிள்ளையவர்கள் வெளியூர்ப் பிரயாணத்தில் இருந்தாலும் என்னை மறக்கவில்லையென்பதை அவரிடமிருந்து சவேரிநாத பிள்ளைக்கு வந்த ஒரு கடிதம் வெளிப்படுத்தியது. திருச்சிராப்பள்ளியிலிருந்து அதை எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் என்னை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று சவேரிநாத பிள்ளைக்குத் தெரிவித்திருந்தார்.

சில தினங்களில் ஆசிரியர் மாயூரத்துக்குத் திரும்பி வந்தனர். வந்தவுடன், நானே சமையல் செய்து சாப்பிடுவதை அறிந்து அவர் மிகவும் வருத்தமுற்று என்னிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து,