பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—46

இரட்டிப்பு லாபம்


ரட்டிப்பு லாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில் ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள் திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும் உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய வஸ்திரங்களும் நாங்கள் எடுத்துக்கொண்டு போனவை.

மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக்கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக்காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

கவிதை வெள்ளம்

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப்பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிதுநேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா? கற்பனை எழுமா? கவிகள் தோன்றுமா? அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன்.

அவர் மனப்பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பதுபோலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டி மெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறுபோல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.

வடதேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப் பேறுபெற்றானென்பது புராண வரலாறு. அவன் அந்த ஸ்தலத்துக்கு வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்த ஸ்தலங்களின் பெருமை-