பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு மூர்த்திகள் மூவர்

285

படுத்துவது போலத் தேசிகர் புன்னகை பூத்தார். வேண்டிய பொருள்களையெல்லாம் தடையின்றி நான் பெற்றுக்கொண்டேன். இயல்பாகவே வேண்டும்போது எனக்கு உதவிவரும் அந்த உக்கிராணக்காரர் அன்று முதல் என் குறிப்பறிந்து எனக்கு வேண்டுவனவற்றை அப்பொழுதப்பொழுது உதவிவந்தார். பிற்காலத்திலும் எனக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய சமயங்களில் அந்த உக்கிராணம் கொடுப்பதும் நான் பெற்றுக்கொள்வதும் வழக்கமாயின.

காலைப் பாடத்தில் திருவானைக்காப் புராணம் முற்றுப்பெற்றது. அதன்பின் திருநாகைக்காரோணப் புராணம் ஆரம்பமாயிற்று. முன்னரே அந்நூலை நான் பட்டீச்சுரத்திலே பாடங் கேட்டிருந்தமையால் மடத்திற் படிக்கும்போது மிக்க தெளிவோடு படித்தேன். அவ்வப்போது இன்ன இன்ன ராகத்தில் படிக்கவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் கூறுவார். அங்ஙனமே நான் படிப்பேன்.

ஓதுவாரது அன்பு

ஒருநாள் காலையில் மடத்திலிருந்து வெளியே வந்து ஆகாரம் செய்யும் இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும். எனக்கெதிரே மடைப்பள்ளி விசாரணைக்காரராகிய முத்துசாமி ஓதுவாரென்பவர் வந்தார். அவருடைய அன்பும் மரியாதையும் எப்போது கண்டாலும் அவரோடு சில வார்த்தைகள் பேசவேண்டுமென்று என்னைத் தூண்டும். ஆதலால் அவரைப் பார்த்தவுடன், “கிழக்கேயிருந்து வருகிறீர்களே; அக்கிரகாரத்தில் ஏதேனும் வேலை இருந்ததோ!” என்று கேட்டேன்.

“ஐயாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“உங்கள் வீடு வடக்கு வீதியில் அல்லவா இருக்கிறது? இங்கே உங்கள் தாயார் தகப்பனார் வரக் காரணம் என்ன?”

“இல்லை. அண்ணாவுடைய ஐயா, அம்மா வந்திருக்கிறார்கள்” என்று அவர் சொன்னவுடனே, “என்ன! எங்கே வந்தார்கள்?” என்று பரபரப்போடு அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆவலைப் புலப்படுத்தினேன்.

ஓதுவார் பிராயத்தில் என்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும் என்னை அண்ணாவென்றே அழைத்துவந்தார். என் பெற்றோர்கள் அன்றைத்தினம் வருவதாக எனக்கு முன்னமே தெரிவிக்க-