பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு மூர்த்திகள் மூவர்

287

அன்னையார் சமைத்துத் தந்தையார் பூஜையில் நிவேதனம் செய்யப்பெற்ற உணவை நான் உண்டு பல நாளாயின. அன்று அவ்வுணவை உண்டு மகிழ்ந்தேன். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்ற திருப்தியால் அவர்களும் மகிழ்ந்தார்கள்.

ராக மாலிகை

அன்றைய தினம் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் நடக்கவேண்டிய பாடம் பிற்பகல் மூன்றுமணி முதல் ஏழுமணி வரையில் மடத்திலுள்ள பன்னீர்க்கட்டில் நடந்தது. சில நாட்களில் அவ்வாறு நடப்பதுண்டு. பாடம் நடக்கையில் சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து அமர்ந்திருந்தார். குமாரசாமித் தம்பிரானும் நானும் பாடங்கேட்டு வந்தோம். பிள்ளையவர்கள் சொன்னபடி நான் திருநாகைக்காரோணப் புராணத்தைப் படித்தேன். என் பெற்றோர்களைக் கண்ட சந்தோஷமும் என் அன்னையார் இட்ட உணவை உண்ட உரமும் சேர்ந்து எனக்கு ஒரு புதிய ஊக்கத்தை உண்டாக்கின. அதனால் அன்று நான் படித்தபோது ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு ராகத்தில் மாற்றிமாற்றி வாசித்தேன். சங்கீதப் பிரியராகிய தேசிகர் ராகங்களைக் கவனித்து வந்தார். இடையிலே பிள்ளையவர்களைப் பார்த்து, “உங்கள் சிஷ்யர் ராகமாலிகையில் படிப்பது திருப்திகரமாக இருக்கிறது” என்றார்.

இவ்வாறு பாடம் நடக்கையில் வடக்குப் புறத்தேயுள்ள ஓரிடத்தில் சிறிது தூரத்தே சிலர் மறைவாக இருந்து கவனிப்பது வழக்கம். அன்றும் அப்படியே சிலர் இருந்தனர். என் தந்தையார் மாலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அப்பக்கமாக வந்தவர் பாடம் நடப்பதையும் சிலர் தூரத்திலே இருந்து கவனிப்பதையும் கண்டு தாமும் அவர்களோடு ஒருவராக அங்கே இருந்து நான் படிப்பதையும் பிள்ளையவர்கள் பொருள் சொல்வதையும் கேட்டு வந்தார். அவர் வந்து கேட்டது எனக்குத் தெரியாது.

நான் ராகத்தோடு வாசிப்பதைக் கேட்டு அவரும் மகிழ்வுற்றார். நான் படிப்பதைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பாராட்டிப் பேசிய வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. அப்போது அவருக்கு உண்டான சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் அளவுகூற முடியுமோ! இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டோடு நடந்ததுபோல் இருந்தது. தற்செயலாக என் தந்தையார் அங்கே வந்ததும், நான் ராகமாலிகையில் படித்ததும் தேசிகர் பாராட்டித் தம் அன்பை வெளிப்படுத்தியதும் என் தந்தையார் மனத்தில் இருந்த கவலையைப்