பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

என் சரித்திரம்

புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும்போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன். என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்னவகையான உணவு செய்துபோட வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில் அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும் உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு அவற்றைக்கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்துவருமென்பது மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.

சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான் அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துச் சாப்பிட்டதுண்டு. அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும் கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.

குழம்பு செய்த குழப்பம்

ஒருநாள் எனக்கு வயிற்றுப்போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக் குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று எனக்குத் தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்துபோடும்படி கேட்டுக்கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்துபோட்டாள். நான் ஆகாரம்செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப் பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார். திருவாலங்காட்டுக்குச் சென்று ஸம்ஸ்கிருதம் படித்து வருபவர் அவர். அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லோரும் சாப்பிடுகிற இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்துபோடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும் சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில்விழும்படி செய்துவிட்டார். உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர் சாப்பிடுகையில்