பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

என் சரித்திரம்

அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக்கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக் தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும். குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம் தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச் சம்பாஷித்திருந்தனர்.

பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுக ருத்திராக்ஷ கண்டியை அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புக்கள் உண்டு ஏறக்குறைய இரண்டாயிர ரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது நேரமான பிறகு பார்த்தபோது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த பொருளாதலால் மடத்துக் காரியஸ்தர்கள் அதைத் தேடலாயினர்.

“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில் இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார் பன்னிருகைத் தம்பிரான்.

“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன் லேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார் குமாரசாமித் தம்பிரான்.

அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன விஷயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம்கூட மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன் யாராயிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்”என்று சொல்லி அச்சம்பாஷணையில் கலந்தனர்.

அவர்கள் மூவரும் பேசிய சப்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத் தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல் மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்தவண்ணமே இருந்தேன். அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.

“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார் குமாரசாமித் தம்பிரான்.