பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில சங்கடங்கள்

295

என்பால் சினங்கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங்கொண்டால் அவரிடம் பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும் ஆசிரியர் ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்துவந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக்கொள்ளும், எழுதும்” என்று சொல்லமாட்டார். படுத்துக்கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல் அடியை ஆரம்பிப்பார். அது புதுப்பாடலாக இருந்தால் அதனை எழுத வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன். அவர் சொல்லிக்கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை அறிந்து நான் நிறுத்திவிடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள் நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோத்ஸவம் நடந்தது. அந்த உத்ஸவ தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக்கூட்டத்துடனும் பரிவாரங்களுடனும் சென்றார். ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம். சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் ஸ்ரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த் தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு காரியஸ்தரோடு அனுப்பி ஆகாரம்செய்து வரும்படி சொன்னார். இவ்விஷயம் பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போஜனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே ஆகாரம்செய்துகொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும்பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே போய் உணவுகொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய வெள்ளை வேஷ்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள். வெள்ளை வேஷ்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு உரியது.