பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைமகள் திருக்கோயில்

299

காலையில் அவர் எந்த உணவையும் உட்கொள்வதில்லை. முதலில் சைவசித்தாந்த சாஸ்திரங்களைப் பாடஞ் சொல்ல ஆரம்பிப்பார். சில தம்பிரான்கள் கேட்பார்கள்.

வரிசை அறிதல்

சாஸ்திரங்களில் விற்பத்தி உள்ள வித்துவான் யாரேனும் வந்தால் அவரைப் பார்த்துப் பேசுவதிலும் அவர் என்ன என்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்துகொள்வதிலும் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. வித்துவான்கள் வந்தால் மடத்து வேலைக்காரர்கள் உடனே தேசிகரிடம் தெரிவிப்பார்கள்.

கொலுமண்டபத்து வாயிலில் ஒரு காவற்காரன் இருப்பது வழக்கம். அக்காலத்தில் முத்தையன் என்ற ஒரு கிழவன் இருந்தான். சுப்பிரமணிய தேசிகரிடம் தொண்டுபுரிந்து பழகிய அவன் அவருடைய இயல்புகளை நன்றாக அறிந்திருந்தான். யாராவது சாஸ்திரிகள் வந்தால் அவரிடம் மரியாதையாகப் பேசி அவர் இன்ன இன்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்துகொள்வான். பிறகு ஓரிடத்தில் அவரை அமரச்செய்து உள்ளே சென்று பண்டார சந்நிதிகளிடம் “ஒரு பிராமணர் வந்திருக்கிறார்” என்பான்.

“என்ன தெரிந்தவர்?” என்று தேசிகர் கேட்பார்.

“தர்க்கம் வருமாம்” என்றோ, “மீமாம்சை தெரிந்தவராம்” என்றோ, வேறுவிதமாகவோ அவன் பதில் சொல்வான்.

உடனே வித்துவான் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அவர் சென்று தேசிகரோடு சம்பாஷணை செய்வார். பேசப் பேச வந்த வித்துவான், “நாம் ஒரு சிறந்த ரஸிக சிகாமணியோடு பேசுகிறோம்” என்பதை உணர்ந்துகொள்வார். வித்துவானுடைய திறமையை அறிந்து தேசிகரும் ஆனந்தமுறுவர். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே, தேசிகர் வந்த வித்துவானுடைய தகுதியை அறிந்துவிடுவார். அப்பால் அவருக்கு ஏற்றபடி சம்மானம் செய்வார். தம்முடைய திறமையை அறிந்து அளிக்கப் பெறும் அந்தச் சம்மானத்தை வித்துவான் மிக்கமகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்.

“இங்கே சிலகாலம் தங்க வேண்டும்; அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று தேசிகர் சொல்வார். அவ்வார்த்தை உபசார வார்த்தையன்று; உண்மையான அன்போடு கூறுவதாகவே இருக்கும். “இம்மாதிரி இடத்துக்கு வராமல் இருப்பது ஒரு குறை” என்ற