பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

என் சரித்திரம்

இருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு என்றுமில்லாத அழகைக்கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை நிர்மாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாஸத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம் படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம் கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல் சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா? கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூதசங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர் இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரியபுராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார். வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வர அந்தச் சங்கீத சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப் பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப்பாட்டோடு ஒன்றிப் பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்.