பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறைப் புராணம்

317

தம்பிரான்களுடைய பழக்கமும் அவ் வருத்தத்தை ஒருவாறு குறைத்தன. திருவாவடுதுறையில் உணவு விஷயத்தில் எனக்கு ஒரு விதமான குறைவும் இல்லை. பொழுதுபோக்கும் இனிமையாக இருந்தது; குமாரசாமித் தம்பிரானுடைய சல்லாபம் எனக்கு ஆறுதலை அளித்தது. ஆசிரியர் கட்டளையிட்டிருந்தபடி, தம்பிரான்கள் எல்லாரிடமும் நான் மிக்க ஜாக்கிரதையுடனும் மரியாதையுடனும் பழகி வரலானேன்.

தேசிகர் கட்டளை

ஒருநாள் இரவில் சுப்பிரமணிய தேசிகருடன் நான் பேசிக்கொண்டிருக்கையில், “பிள்ளையவர்களிடம் போய் ஒரு சமாசாரம் சொல்லிவிட்டு வர வேண்டும்” என்றார்.

“கட்டளைப்படியே செய்கிறேன்” என்று நான் சொன்னேன்.

திருப்பெருந்துறையில் ஆலய விசாரணை செய்துவந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். பிள்ளையவர்களை அந்த ஸ்தலத்திற்கு நாடு, நகரச் சிறப்புடன் ஒரு புராணம் பாடும்படி கட்டளையிட வேண்டுமென்றும் அவ்வாறு அவர் பாடி அரங்கேற்றி முடித்தால் இரண்டாயிரம் ரூபாய் தாம் சம்மானம் பண்ணுவதாகவும் தம்பிரான் அதில் தெரிவித்திருந்தார். அக்கடிதத்தைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் சொல்லிவிட்டு, “நல்ல சந்தர்ப்பத்தில் இந்த வேண்டுகோள் வந்திருக்கிறது. பிள்ளையவர்கள் தம் குமாரருக்கு விவாகம்செய்த வகையில் ஏதேனும் சிரமம் அடைந்திருக்கலாம். அதை நீக்கிக்கொள்வதற்கு இது நல்லது. நீர் போய் இவ்விஷயத்தைத் தெளிவாக எடுத்துச்செல்வதோடு, அவ்வாறு செய்வது பல விஷயங்களில் அனுகூலமாக இருக்குமென்று நாமும் அபிப்பிராயப்படுவதாகச் சொல்லும். திருப்பெருந்துறைக்குரிய வடமொழிப் புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் அந்த ஸ்தலத்திற்கு முன்பே உள்ள இரண்டு பழைய புராணங்களையும் தம்பிரான் அனுப்பியிருக்கிறார். அவற்றையும் பிள்ளையவர்களிடம் கொண்டுபோய்க் கொடுத்து வாரும்” என்று சொல்லி அப்புஸ்தகங்களையும் என்னிடம் கொடுத்தார்.

ஒரு செய்யுளடி

நான் மறுநாட் காலையிலேயே மாயூரத்திற்கு நடந்து சென்றேன். ஆசிரியரிடம் செய்தியைச் சொல்லிப் புஸ்தகங்களையும் கொடுத்தேன். அவர் அவ்விஷயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்-