பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

என் சரித்திரம்

இராதென்ற எண்ணமே அதற்குக் காரணம். பட்டீச்சுரம் என்றாலே எனக்கு ஒருபயம் உண்டு அங்கே பிள்ளையவர்கள் இருப்பதனால் நானும் இருக்கவேண்டிய அவசியம் நேர்ந்தது. என் தாய், தந்தையரும் அங்கே வந்து இருந்துவிட்டால் அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம் எந்த எந்த ரூபத்தில் வெளிப்படுமோ என்று பயந்தேன்.

ஆகவே தக்க காரணங்களை நான் பிள்ளையவர்களிடம் சொல்லி என் தாய், தந்தையர்கள் உடன் வருதலை நிறுத்தினேன். அக்காலத்தில் நான் கையில் வெள்ளிக்காப்பும் வெள்ளிச்சங்கிலியும் அணிந்திருந்தேன். என் ஆசிரியர், “நாம் பல இடங்களுக்குப் போகும்படியிருக்கும். இவை கையிலிருந்தால் ஏதேனும் அபாயம் நேர்ந்தாலும் நேரலாம். ஆகையால் இவற்றைக் கழற்றி உம்முடைய தந்தையாரிடம் கொடுத்துவிடும்” என்று கூறவே நான் அங்ஙனமேசெய்தேன்.

பிறகு நான் என் தந்தையாரை அழைத்துக்கொண்டு சூரியமூலை சென்று அவர்களை அங்கே விட்டுவிட்டுச் சில தினங்களில் வருவதாக ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டேன். “சரி அப்படியே செய்யலாம். சூரியமூலைக்குப் போய்விட்டு இங்கே வந்து பாரும். நான் இங்கே இருந்தால் என்னுடன் சேர்ந்து வரலாம் இல்லையாயின் பட்டீச்சுரத்துக்கு வந்துவிடலாம்” என்று ஆசிரியர் எனக்குக் கட்டளையிட்டார். அங்ஙனமே சூரியமூலை போய்விட்டுத் திருவாவடுதுறைக்கு வந்தேன். அதற்குள் ஆசிரியர் பட்டீச்சுரம் சென்றுவிட்டதாகத் தெரிந்ததால் நானும் அங்கே போய் அவரோடு இருந்துவரலானேன். வழக்கம்போல அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

நான் சூரியமூலைக்குப் புறப்பட்டுச் சென்ற மறுநாளே பிள்ளையவர்கள் பட்டீச்சுரத்துக்கு வேண்டிய சாமான்களுடன் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் சண்பகக் குற்றாலக் கவிராயர் மட்டும் பட்டீச்சுரம் போய்ச் சில தினங்கள் இருந்துவிட்டு அப்பால் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். வேறு மாணாக்கர்கள் ஒருவரும் உடன் செல்லவில்லை. பிள்ளையவர்கள் விரும்பியபடி சவேரிநாத பிள்ளை மாயூரத்துக்கு வந்து ஆசிரியர் வீட்டில் இருந்தனர். மாணாக்கர்களெல்லாம் உடன்வருவதாகச் சொன்னதையும் ஒருவரேனும் வராமற்போனதையும் என் ஆசிரியர் அடிக்கடி என்னிடம் எடுத்துச்சொல்வார். “உலகமே பணத்தில் நிற்கிறது. கல்வி, அன்பு, என்பனவெல்லாம் அதற்கு அடுத்தபடி உள்ளவையே” என்பார். அப்பொழுதெல்லாம், “நல்லவேளை! நாம் அக்கூட்டத்தில் சேரவில்லையே” என்ற ஒருவகையான திருப்தி எனக்கு உண்டாகும்.