பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

என் சரித்திரம்

விசாகப் பெருமாளையர் எழுதிய பால போத இலக்கணமென்ற புஸ்தகம் மிகவும் விளக்கமாகவும் சுருக்கமாகவும் உள்ளதென்று தியாகராச செட்டியார் சொன்னார். அப்போது, “நான் அதை ஐயாவிடம் பாடங் கேட்கலாமா?” என்று கேட்டேன். “அப்படியே செய்யலாம்” என்று செட்டியார் சொன்னார். என்னிடம் அப்புஸ்தகம் இல்லாமையால் ஆசிரியர் செட்டியாரிடம் அவரது பிரதியை எனக்குக் கொடுக்கும்படி சொன்னார். அவர் பல காலமாக வாசித்துப் பழகின புஸ்தகமானதால் அதைக் கொடுக்க உடன்படவில்லை. புஸ்தகத்தை மாத்திரம் வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு ஆசிரியர் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

மறுநாட் காலையில் நான் படுக்கையிலிருந்து எழுந்தபோது அருகில் பிள்ளையவர்களைக் காணவில்லை. தினந்தோறும் காலையில் அவர் விழித்தவுடன் என்னையும் எழுப்பி வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். அன்று அவர் விரைவில் எழுந்து வெளியே சென்றுவிட்டார் என்று அறிந்து திடுக்கிட்டேன். எனக்குக் காரணம் புலப்படவில்லை. வெளியே வந்து பார்க்கையில் அங்கே திண்ணையில் என் ஆசிரியர் உட்கார்ந்திருந்தார். அவர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்திருப்பதாக அவர் தோற்றத்தால் உணர்ந்தேன். அவருக்கு அருகே கும்பகோணம் காலேஜில் உதவித் தமிழ்ப்பண்டிதராக இருந்த தி. கோ. நராயணசாமி பிள்ளை என்பவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

என்னைக் கண்டவுடன் ஆசிரியர் தம் கையில் உள்ள ஒரு புஸ்தகத்தைக் காட்டி, “இதோ பால போத இலக்கணம்; இவரிடமிருந்த வாங்கினேன்; நீர் பாடம் கேட்கலாம்” என்றார். என் ஆசிரியர் விடியற்காலையிலே எழுந்து தனியே சென்று அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அரை மைல் தூரத்திற்கு அப்பால் இருந்த நாராயணசாமி பிள்ளை வீட்டிற்குச் சென்று பாலபோத இலக்கணத்தை அவரிடமிருந்து வாங்கி வந்தனரென்றும், செட்டியார் புஸ்தகம் தர மறுத்ததை எண்ணி இவ்வாறு செய்தாரென்றும் தெரிந்துகொண்டேன்.

உடனே விரைவில் எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து பாலபோத இலக்கணத்தைப் பாடங் கேட்க ஆரம்பித்தேன். நன்னூலைப் பாடங் கேட்டவனாதலின் அப்புஸ்தகத்தின் அருமை எனக்கு விளங்கியது. அதனை முற்றும் இரண்டுமுறை பாடங் கேட்டேன். இடையிடையே ஆசிரியர் அப்புஸ்தகத்தின் அமைப்பைப் பாராட்டியதோடு விசாகப் பெருமாளையரைப் பற்றிய வரலாற்றையும் எடுத்துச் சொன்னார்.