பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

என் சரித்திரம்

என்‌ நன்மையை உத்தேசித்தது

ஒருநாள் தியாகராச செட்டியார் பட்டீச்சுரம் வந்திருந்தபோது அவர் என்னிடம், “கும்பகோணத்தில் (ராவ் பகதூர்) அப்பு சாஸ்திரிகள் முதலிய மூன்று கனவான்கள் சேர்ந்து நேடிவ் ஹைஸ்கூல் என்ற பெயருடன் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். அம்மூவரும் என்னிடத்தில் அன்புள்ளவர்கள். அப்பள்ளிக்கூடத்திற்கு ஒரு தமிழ்ப்பண்டிதர் வேண்டும், தக்கவர் ஒருவரைப் பார்த்துச் சொல்லவேண்டும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே உம்முடைய ஞாபகம் வந்தது. முதலில் மாதம் பதினைந்து ரூபாய் தருவார்கள். பிறகு சம்பளம் உயரும்” என்றார். அதைக் கேட்டபோது ஏற்றுக்கொள்ளலாமென்ற எண்ணமே எனக்கு முதலில் உண்டாயிற்று. பிள்ளையவர்களிடம் நாங்கள் இருவரும் இவ்விஷயத்தைத் தெரிவித்தோம்.

அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அவர் மனத்துள் பலவகையான எண்ணங்கள் ஓடினவென்று தோற்றியது. பிறகு தியாகராச செட்டியாரைப் பார்த்தார். “தியாகராசு, இப்போது என்ன அவசரம்! இவர் இன்னும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவில்லை. உத்ஸாகமாகப் படித்துவருகிறார். இப்பொழுதே உத்தியோகத்துக்குப் போய்விட்டால் இவ்வளவு ஊக்கமாகப் படிக்க முடியாது. நேரமும் கிட்டாது. இன்னும் சில வருஷங்கள் படிக்கட்டுமே; அப்பால் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்” என்றார். என் விருப்பத்தைக் கேளாமலே அவர் சொன்னாலும் எனக்கு எது நன்மையோ அதை யோசித்தே அவர் அவ்வாறு கூறினார். செட்டியாரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். “ஐயா சொல்வது உண்மைதான். இளமையிலே படிப்பதுதான் நிற்கும். நாள் ஆக ஆக உயர்ந்த உத்தியோகம் உம்மையே தேடிவரும். நீர் கவலைப்பட வேண்டாம். இவர்களிடம் நன்றாகப் படித்துக்கொண்டிரும்” என்று என்னிடம் சொன்னார்.

நானும் யோசித்துப் பார்த்தேன். அவ்விருவரும் என் நன்மையை உத்தேசித்தே சொல்வதை உணர்ந்து என் விருப்பத்தை மாற்றிக்கொண்டேன்.

திருச்சிராப்பள்ளி யாத்திரை

ஸ்ரீமுக வருஷம் ஐப்பசி மாதம் (1873 அக்டோபர்) என் ஆசிரியர் சில முக்கியமான காரியங்களின்பொருட்டுத் திருச்சிராப்பள்ளிக்குப் பிரயாணமானார். அவருடன் நானும் சென்றேன் அக்காலத்தில் நாகபட்டினத்திலிருந்து தஞ்சாவூர் வழியாகத் திருச்சிராப்-