பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—57

திருப்பெருந்துறை


மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத் தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தை முடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார். எல்லோரிடமும் விடைபெற்று அவர் (1873 டிஸம்பர்) புறப்பட்டார். மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சில மாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப் பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர்.

புறப்பாடு

எல்லோரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கே தங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழியாகத் திருப்பெருந்துறையை அடைந்தோம்.

நாங்கள் போய்ச் சேர்ந்தபோது ஆருத்திரா தரிசனத்தின்பொருட்டு எங்களுக்கு முன்னரே பல வித்துவான்களும் சிவபக்திச் செல்வர்களும் அங்கே வந்து தங்கியிருப்பதைப் பார்த்தோம்.

பிள்ளையவர்களுடைய வரவு எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. கோயிலார் மேளதாளத்துடன் வந்து அக்கவிஞர் பெருமானைக் கண்டு பிரசாதமளித்துத் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆலயத்தில் சுப்பிரமணியத் தம்பிரான் அவரை வரவேற்றார். அன்று மாணிக்கவாசகர் மந்திரிக் கோலங்கொண்டு எழுந்தருளியிருந்தார்.

அருவ மூர்த்திகள்

மற்ற ஸ்தலங்களில் இல்லாத ஒரு புதுமையைத் திருப்பெருந்துறையிலே கண்டேன். சிவாலயங்களில் சிவலிங்கப் பெருமானும் அம்பிகையின் திருவுருவமும் மூலஸ்தானங்களில் இருக்கும். அந்த ஸ்தலத்தில் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் எந்தவிதமான உருவமும் இல்லை. வெறும்பீடங்கள் மாத்திரம் இருக்கின்றன. சுவாமியும் அம்பிகையும் அரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதிஹ்யம். பூஜை முதலியன அப்பீடங்களுக்கே நடைபெற்று வருகின்றன.