பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

என் சரித்திரம்

இருக்கிறது. ஆறு காலங்களிலும் இரண்டு சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் ஒரே சமயத்தில் நடைபெறும்.

அக்கோயிலில் வேறு கோயில்களிற் காணப்படாத மற்றொரு விசேஷம் உண்டு. சிவாலயங்களில் சிவதரிசனத்துக்கு முன் நந்திதேவரைத் தரிசித்து அவர் அனுமதிபெற்று ஆலயத்துள்ளே புகுதலும் தரிசனம்செய்து திரும்புகையில் சண்டேசுவரரைத் தரிசித்து விடைபெற்று வருதலும் சம்பிரதாயங்களாகும். அக்கோயிலில் அந்த இரண்டு மூர்த்திகளும் இல்லை. ஆதலால் தரிசனம் செய்பவர்கள் உள்ளே செல்லும்போதும் தரிசித்துவிட்டு மீளும்போதும் மாணிக்கவாசரைத் தரிசித்து முறையே அனுமதியையும் விடையையும் பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற ஸமஸ்தானங்களாலும் பச்சையப்ப முதலியார் முதலிய பிரபுக்களாலும் இத்தலத்திற் பலவகைக் கட்டளைகள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன.

நிவேதனம் முதலிய விசேஷங்கள்

மற்றச் சிவாலயங்களில் செய்யப்பெறும் நிவேதனங்களோடு புழுங்கலரிசி அன்னம், பாகற்காய்ப் புளிங்கறி, அரைக்கீரைச் சுண்டலென்பவையும் அங்கே நிவேதனம் செய்யப்பெறும்.

அங்கே தீபாலங்காரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தினந்தோறும் இரா முழுவதும் அத்தீபாலங்காரத்தைக் காணலாம்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பூசித்து வழிபடுபவர்கள் மூவாயிரவரென்றும் அவர்கள் தில்லை மூவாயிரவரென்னும் பெயருடையவரென்றும் அவர்களுள் சிவபிரானே ஒருவரென்றும் கூறுவர். திருப்பெருந்துறையிலும் அதைப் போன்ற முறையொன்று உண்டு. இக்கோயில் பூஜகர்கள் முந்நூற்றுவரென்னும் மரபினர். ஆதியில் முந்நூறு பேர்கள் இருந்தனரென்றும் அவர்களுள் ஆத்மநாத ஸ்வாமி ஒருவர் என்றும் புராணம் கூறும்.

இப்போது சுவாமிக்கும் அம்பிகைக்கும் பூஜை முதலியன செய்து வருபவர்களை நம்பியாரென்று அழைக்கின்றனர். அவர்கள் செய்வது வைதிக பூஜை. மாணிக்கவாசகருக்கு மாத்திரம் ஆதிசைவர்கள் ஆகமப்படி பூஜைசெய்து வருகின்றனர்.

வீரபத்திரர்

அம்பிகையின் சந்நிதியில் வீரபத்திரர் கோயில்கொண்டிருக்கிறார். தக்ஷனுடைய யாகத்தை அழித்த அக்கடவுள் அத் திருக்-