பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்கு வந்த ஜ்வரம்

255

இருக்கிறது? எப்பொழுதும் யாரேனும் வந்து பேசிவருகிறார்கள். இவர்கள் பாடல்களை இயற்றுவதற்கு ஓய்வு எவ்வாறு கிடைக்கும்? அரங்கேற்றத்தை இரண்டு தினங்கள் நிறுத்திவைக்கத்தான் வேண்டும்?” என்று நான் எண்ணியிருந்தேன்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மறுநாள் பொழுதுவிடிந்தது. வழக்கம்போல் காலையிற் சிலர் வந்து பேசத் தொடங்கினர். “சரி; இன்றைக்கு அரங்கேற்றம் நிற்க வேண்டியதுதான்” என்று நான் நிச்சயமாக எண்ணினேன். வந்து பேசியவர்களிடம் எனக்குக் கோபங்கூட உண்டாயிற்று.

சிறிது நேரத்துக்குப்பின் ஆசிரியர் என்னை அழைத்து ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்துவரச் சொன்னார். நான் அவற்றை எடுத்துச் சென்றேன். அவரருகில் உட்கார்ந்தேன். “நல்ல வேளை; இப்பொழுதாவது இவர்களுக்கு நினைவுவந்ததே!” என்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. அங்கிருந்தவர்களை எல்லாம் விடைகொடுத்தனுப்பிவிட்டுச் செய்யுள் இயற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்த்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நடக்கவே இல்லை. அவர்கள் இருக்கும்பொழுதே பாடல் செய்யத் தொடங்கிவிட்டார் அக்கவிஞர்பிரான். வந்தவர்களும் அவர் செய்யுளைத் தடையின்றி இயற்றிவரும் ஆச்சரியத்தைக் கவனித்து வந்தார்கள். இடையிடையே அவர்களோடு பேசியபடியே செய்யுட்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வந்தார். அவ்வளவுகாலம் அவரோடு பழகியும் அத்தகைய அதிசய நிகழ்ச்சியை அதுவரையில் நான் பார்க்கவே இல்லை. பிறரோடு சம்பாஷித்தும் அதே சமயத்தில் கற்பனை செறிந்த செய்யுட்கள் பலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இயற்றிக்கொண்டும் இருந்த அவருடைய பேராற்றலை நான் மனத்துள் வியந்துகொண்டே எழுதிவந்தேன். அஷ்டாவதானம் செய்பவர்கள்கூடச் சில செய்யுட்களையே செய்வார்கள். ஆசிரியரோ ஒரு புராண காப்பியத்தை இயற்றி வந்தார். அக்கூட்டத்தின் நடுவே அவர்களுடன் பேசும்போதே அவர் மனத்தில் கற்பனைகள் எவ்வாறு தோற்றினவென்பது ஒரு பெரிய அதிசயமாகவே இருந்தது.

அக்கவிஞரது மன இயல்பை நாளடைவில் தெரிந்துகொண்டேன். அவர் உள்ளம் கவிதை விளைபுலம்; அதில் எப்பொழுதெல்லாம் உத்ஸாகம் நிறைந்திருக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தடையின்றிச் செய்யுட்கள் எழும். பல அன்பர்களுடன் பேசி-