பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

என் சரித்திரம்

திடீரென்று, “நான் அங்கே வரலாமா?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் எனக்குத் துணுக்கென்றது. அவருக்கு இருந்த கஷ்டம், “எங்காவது உபகாரம் செய்பவர்கள் இருக்கிறார்களா?” என்று எண்ணச் செய்தது போலும்.

“ஐயா அவர்கள் அங்கே வருவதாக இருந்தால் எல்லோரும் தலைமேல் வைத்துத் தாங்குவார்கள். அங்கே உள்ளவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுடைய அன்புக்கு இணையாக எந்தப் பொருளும் இல்லை. விருத்தாசல ரெட்டியார் முதலிய செல்வர்கள் ஐயா அவர்களைப் பாராமல் இருந்தாலும் ஐயா அவர்களிடம் பக்தியும் பாடங் கேட்க வேண்டுமென்னும் ஆவலும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஐயா அவர்களின் பெயரைச் சொல்லித்தான் நாங்கள் பிழைத்து வருகிறோம்” என்றேன் நான்.

தலச்சிறப்புகள்

அன்று மாலை பிள்ளையவர்கள் என்னை அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ள மூர்த்திகளையும் தீர்த்தங்களையும் பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயம் கோச்செங்கட் சோழராற் கட்டப்பெற்றதென்றும், தேவாரத்தில் அதனைப் புலப்படுத்தும் குறிப்பு இருக்கிறதென்றும் கூறினார். திவாகரத்திற் பாராட்டப் பெறுபவனும் ஒளவையாராற் புகழப்படுபவனுமாகிய சேந்தன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தது அவ்வூரே என்று தெரிந்துகொண்டேன்.

பாடம் கேட்டலும் சொல்லுதலும்

அம்பரில் சில தினங்கள் ஆசிரியரிடம் சில நூல்களைப் பாடங் கேட்டேன். அம்பர்ப் புராண அரங்கேற்றம் அப்போது ஆரம்பமாகவில்லை. ஆதனால் இடையே ஆசிரியருடன் கொங்குராயநல்லூர், சொர்க்கபுரம் என்னும் ஊர்களுக்குப் போய் வந்தேன். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டதோடு வேலுப்பிள்ளையின் தம்பியாகிய குழந்தைவேலுப் பிள்ளைக்குச் சேக்கிழார் பிள்ளைத் தமிழும் திருவிடைமருதூருலாவும் சொன்னேன்.

நான் பாடம் சொல்லுகையில் கவனித்த ஆசிரியர், “சாமிநாதையர் புராணப் பிரசங்கம் செய்த பழக்கத்தால் நன்றாக விஷயங்களை விளக்குகிறார்” என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினார்.

விடைபெற்று மீண்டது

அம்பரில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அப்பால், “நான் காரைக்குப்போய்ப் புராணத்தைப் பூர்த்திசெய்துகொண்டு வந்து-