பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபய வார்த்தை

397

களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டு எப்போதும் நம்முடைய பக்கத்திலே இருந்து வரலாம். உமக்கு யாதொரு குறையுமின்றி நாம் பார்த்துக் கொள்வோம். இந்த ஊரையே உம்முடைய ஊராக நினைத்துக் கொள்ளும். நீரும் தம்பிரான்களைப்போல மடத்துப் பிள்ளையாகவே இருந்து வரலாம். உமக்கு எந்த விதத்திலும் குறை நேராது” என்று அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

அந்த அபய வார்த்தைகள் ‘உபசாரத்தின்பொருட்டுச் சொன்னவையல்லவென்பது எனக்குத் தெரியும்.

மெல்ல விடைபெற்றுத் திரும்பினேன். சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் பேரன்புடையவரென்பதை நான் நன்றாக உணர்ந்திருந்தும் குமாரசாமித் தம்பிரான் கூறிய வார்த்தைகளாலேயே கலங்கிப் போனேன். பிள்ளையவர்களுடைய அன்பில் வளர்ந்த எனக்கு மற்றவர்களது அன்பின் நிலையை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பமும் நேரவில்லை. பிள்ளையவர்கள் பிரிந்த பிறகு தேசிகருடைய அன்பின் சிறப்பானது தெளிவாக விளங்கத் தொடங்கியது.

கடிதங்கள்

மடத்திற்கு வந்தவர்களெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களோடு பேசும்போது தேசிகர் பிள்ளையவர்கள்பால் வைத்திருந்த மதிப்பு நன்றாகப் புலப்பட்டது, என்னிடமும் பலர் வந்து விசாரித்தனர்.

சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளையின்படி, பிள்ளையவர்கள் காலஞ்சென்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அன்பர்களுக்குக் கடித மூலம் தெரிவிக்கப்பட்டது. குமாரசாமித் தம்பிரான் சிலருக்குக் கடிதம் எழுதினார். சிதம்பரம் பிள்ளை பலருக்கு எழுதினார். நானும் பலருக்குக் கடிதம் எழுதினேன்.

அன்பர்கள் பலர் தங்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பதிற் கடிதங்கள் எழுதினர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலிய பலர் இரங்கற் பாடல்கள் எழுதினர். ஸ்ரீ மகா வைத்திய நாதையரும் அவர் தமையனாராகிய இராமசுவாமி ஐயரும் கடிதமும் பாடல்களும் எழுதினார்கள்.

இவ்வாறு பலர் சரமகவிகள் பாடியபோது நாமும் பாடவேண்டுமென்ற உணர்ச்சி எனக்கு உண்டாகவில்லை. அத்துக்கத்தை