பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

என் சரித்திரம்

சாஸ்திரிகள்:— பிருதுவியில் இல்லாத தேங்காயா இது? இதற்குள்ளே மாணிக்கமா இருக்கிறது? எல்லாத் தேங்காயையும் போலவேதான் தேங்காயும் இளநீருந்தானே இருக்கின்றன!

தேசிகர் :— உடைத்துப் பார்த்தால் தெரியும்.

சாஸ்திரிகள் உடனே அத்தேங்காயை எடுத்து உடைக்க ஆரம்பித்தார். தேசிகர் சிரித்துக் கொண்டே, “வேண்டாம்; உடைக்க வேண்டாம். விஷயத்தைச் சொல்லுகிறோம்” என்று தடுத்து விட்டுச் சொல்லத் தொடங்கினார்: “மடத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள குடியானவர்களில் கரும்பு வைத்துப் பயிராக்குவோன் ஒருவன் வெல்லத்தால் தேங்காயைச் செய்வித்து இங்கே கொண்டு வந்து சேர்ப்பித்தான். வேறொருவன் வெல்லத்தைக் கொண்டு விநாயக மூர்த்தி செய்வித்துக் கொணர்ந்து சேர்ப்பித்தான். இந்த இரண்டினுடைய வேலைப்பாட்டையும் அறிந்து தேங்காய் கொணர்ந்தவனுக்கு ரூபா பத்தும், விநாயகரைக் கொணர்ந்தவனுக்கு இருபது ரூபாயும் கொடுத்து அனுப்பினோம்”

பிறகுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. மிக்க ஆச்சரியத்தை அடைந்தோம். “இவற்றை உம்முடைய பிதா அவர்களிடம் கொடும். நீர் கேட்ட தேங்காய் முதலியவை பின்பு வரும்” என்று தேசிகர் என்னை அனுப்பினார்.

அவற்றை எடுத்துச் சென்று தந்தையாரிடம் கொடுத்து விஷயத்தைச் சொல்லும்போதே இரண்டு கூடை நிறைய இளநீர்களும் தேங்காய்களும் கருப்பந்துண்டங்களும் வேறு பொருள்களும் வந்தன.

அன்று என் தந்தையார் அதற்குமுன் அடையாத திருப்தியை அடைந்தார்; தன் மனமாரச் சிவராத்திரி பூஜை செய்து இன்புற்றார்.

தேசிகர் கட்டளை

திருவாவடுதுறை மடத்தில் படித்து வந்தவர்களுள் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நானும் சகோதரர்களைப் போலவே பழகி வந்தோம். நாங்கள் இருவரும் பெரும்பாலும் சேர்ந்து படிப்பதும் சேர்ந்தே இருப்பதும் வழக்கம். ஒருநாள் எங்கள் இருவரையும் தேசிகர் அழைத்து, “நீங்கள் இரண்டு பேரும் நம்மிடத்திற் பகலிலும், ராத்திரி ஆகாரஞ் செய்த பின்பும் வந்து படிக்க வேண்டிய நூல்களைப் படித்து வாருங்கள். இதுவரை படியாத நூல்களை மற்றக்காலங்களில் இருவருமாகச் சேர்ந்து