பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

என் சரித்திரம்

என்னையும் தம்முடன் அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்தார். உடனே தேசிகர், “உங்கள் குமாரர் இனி நம்மிடத்திலே இருக்கவேண்டியவர். அவர் இன்னும் படிக்கவேண்டிய நூல்கள் இருக்கின்றன. அவற்றை நாமே பாடஞ் சொல்வோம். இங்கே படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்வதற்கு அவர் மிகவும் உபயோகப்படுகிறார். பிள்ளையவர்களிடம் கற்றகல்வி இனிமேல்தான் அதிகமாகப் பயன் தரப்போகிறது. நீங்கள் மாத்திரம் இப்போது ஊர் சென்று உங்கள் பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கொண்டு இங்கேயே ஸ்திரமாக வந்துவிடுங்கள். உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் இங்கே கிடைக்கும்படி செய்வோம். வீடு கட்டிக் கொடுக்கிறோம். யாதொரு கவலையும் இல்லாமல் காவேரி ஸ்நானமும் சிவ பூஜையும் செய்துகொண்டு சுகமாக இருக்கலாம்” என்று சொன்னார்.

தேசிகர் இவ்வாறு சொல்லி வரும்போது என் தந்தையாருக்கு வரவர ஸந்தோஷம் அதிகமாயிற்று. அவர் தம்மையே மறந்தார். தேசிகர் பேசி நிறுத்தியவுடன் அருகில் ஒரு குத்துவிளக்கிலிருந்து இரண்ட புஷ்பங்கள் (பொறிகள்) கீழே விழுந்தன. “ஐயா, நல்ல சகுனமாகிறது. இவர் சௌக்கியமாக இருப்பார். நீங்கள் போய்ச் சீக்கிரம் வந்துவிடுங்கள்” என்று மீண்டும் தேசிகர் சொல்லி வஸ்திர மரியாதை செய்து செலவுக்குப் பத்து ரூபாயும் அளித்தார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து கவனித்து வந்த எனக்கு உள்ளந்தாங்கா மகிழ்ச்சி உண்டாயிற்று.

குடும்ப நிலையைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்துக் கவலைக் கடலில் ஊறிப் போயிருந்த என் தந்தையாருக்கு எதிர்பாராதபடி அக்கவலை நீக்குதற்குரிய மார்க்கம் கிடைக்கவே அவர் பேரானந்தம் அடைந்தார். தேசிகரைப் பாராட்டிவிட்டு நேரே ஜாகைக்கு வந்தார். வரும்போதே, “என்ன பிரபு! என்ன பிரபு! இம்மாதிரி இடம் எங்குமில்லை. நாம் செய்த பூர்வ ஜன்ம புண்ணிய பலன் தான் இது” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

“இப்போது நான் சாமாவை அழைத்துக்கொண்டு போகவில்லை. பரமேசுவரனுடைய கிருபை நம்மைக் காப்பாற்றுவதற்குச் சித்தமாக இருக்கிறது” என்று குதூகலத்தோடு தாயார் முதலியவர்களிடம் கூறித் தேசிகர் சொன்னவற்றையும் சொன்னார்.

அப்பால் ஒரு நல்ல நாளில் தந்தையார் எல்லோரிடமும் விடை பெற்று என் தாயாரையும் தம்பியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு உடையார் பாளையம் சென்றார்.