பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

419

பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

என் உத்ஸாகம்

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும் படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடை பெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, “இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

இசையில் வெறுப்பு

நான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய