பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

421

சௌஸ்துபத்தை, போற்று-வழிபடு” என்று பொருள் சொன்னேன். உடனே அவர் கை மறித்து, “அதற்கு அர்த்தம் அப்படிச் சொல்லக் கூடாது. அஞ்சு ஐ மாமணியை என்று பிரித்து இருபத்தைந்து அக்ஷரங்களாலாகிய இருதலை மாணிக்கமென்னும் மந்திரத்தை என்று பொருள் சொல்ல வேண்டும்” என்றார். நாங்கள் கேட்டு வியந்தோம்.

“சம்பிரதாயம் தெரிந்தவர்களிடம் கேட்பதில் உள்ள பிரயோசனத்தைப் பார்த்தீர்களா?” என்று எங்களை நோக்கிச் சொல்லிவிட்டுத் தேசிகர் அவ் வித்துவானைப் பாராட்டினார்.

தனியான இடம்

மறுநாட் காலையில் கோவிந்த பிள்ளை என்னைப் பார்த்து, “நான் சிறிது தூரம் வெளியே போய் வரவேண்டும். சகாயத்துக்கு யாரையாவது வரச்சொல்லும்” என்றார். அப்பொழுது என்னிடம் படித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பிள்ளை என்பவரை அவருடன் அனுப்பினேன். அம்மாணாக்கர் திருமண் அணிபவர்; வைஷ்ணவ சம்பிரதாயத்திலே பற்றுடையவர். பாடம் கேட்கும்போது விஷ்ணு தூஷணையாக உள்ள பகுதிகள் வந்தால் மிகவும் கஷ்டப்படுவார். “இப்படிதான் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரைத் தூஷிப் பார்கள். நாம் அதைக் கவனியாமல் இலக்கியச் சுவையைமட்டும் அனுபவிக்க வேண்டும்” என்று நான் சமாதானம் சொல்வேன்,

சைவ மயமாயிருந்த அங்கே வைஷ்ணவ சம்பந்தமே இல்லாமையால் அவர், “யாரேனும் வைஷ்ணவர் வரமாட்டாரா?” என்ற ஏக்கம் பிடித்தவராக இருந்தார். கோவிந்த பிள்ளை வந்தபோது மிக்க தாகமுடையவன் பானகத்தைக் கண்டது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். அந்த வித்துவான் எங்கே போனாலும் அவரோடு நிழல் போலச் செல்வார். அவர் எதைச் சொன்னாலும் பரம சந்தோஷத்தோடு கேட்பார்.

அவர் கோவிந்த பிள்ளையைப் பயபக்தியோடு அழைத்துச் சென்றார். “ஒருவரும் வராத இடமாக இருக்கட்டும்” என்று கோவிந்த பிள்ளை சொல்லவே, “அப்படியே ஆகட்டும்” என்று வழிகாட்டிச் சென்றார். கோவிந்த பிள்ளை காலைக் கடன்களை முடித்துக் கொள்ள எண்ணினாரென்பது இராமகிருஷ்ண பிள்ளையின் கருத்து. அவரோ, “இன்னும் எங்கே போகவேண்டும்?” என்று அடிக்கடி அவசரமாகக் கேட்டுக் கொண்டே நடந்தார்.

“இதோ வந்துவிட்டோம்” என் சொல்லியபடியே ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள லக்ஷத்தோப்பென்னும் இடத்துக்கு அவரை அம்மாணாக்கர் அழைத்துச் சென்றார்.