பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ்பகதூர் திரு. பாட்டாபிராம பிள்ளை

423

எதையாவது சொல்வார். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டோமென்ற கர்வத்தால் இப்படி அம்முதியவரைச்சில சமயங்களில் தம்பிரான்கள் கலங்க வைத்தார்கள்.

முதிர்ந்தவராகிய அவர், இளமை முறுக்கினாலும் படிப்பு மிடுக்கினாலும் தம்பிரான்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் மயங்கி, “நீங்களெல்லாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். அவர் திரிசிரபுரத்தில் இருந்தபோதே நன்றாகப் படித்திருந்தார் இங்கே வந்து சிவஞான சுவாமிகள் முதலியவர் இயற்றிய நூல்களைப் படித்து விருத்தியடைந்தார். உங்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்களே ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்வார்.

“பிள்ளையவர்கள் தங்களிடம் படித்தார்களென்று சொல்லுகிறார்களே. உண்மைதானா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை; அது பொய். அவர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் பெரியவர், படிப்பிலும் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.

விடை பெற்றுச் சென்றது

வைஷ்ணவராகிய அவருக்குச் சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது. அதனாலும் தம்பிரான்கள் கேள்வி கேட்டமையாலும் அவருக்கு அங்கே தங்கியிருக்க விருப்பமில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று தேசிகருக்குச் சொல்லியனுப்பினார். அவரது குறிப்பறிந்து சுப்பிரமணிய தேசிகர் சால்வை மரியாதையும் தக்க பொருள் ஸம்மானமும் செய்து, “அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார். அவர் மீண்டும் கபிஸ்தலம் போய்ச் சேர்ந்தார்.

அத்தியாயம்—69

ராவ்பகதூர் திரு. பாட்டாபிராம பிள்ளை

திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும்