பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

என் சரித்திரம்

இயற்கையே. அந்தப் பொறாமைக்காரர்கள் எங்களுக்குச் சில இடையூறுகளைச் செய்யலாயினர். புது வீட்டிலே குடி புகுந்தவர்களுக்கு வேண்டிய நவ பாண்டங்களை நிறுத்தி விட்டனர்.

பொன்னுசாமி செட்டியார்

இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர், மடத்தில் ராயஸ வேலை பார்த்துக் கொண்டிருந்தவரும் என்னிடம் பாடங்கேட்டு வந்தவருமாகிய மு. பொன்னுசாமி செட்டியாரென்பவரை அழைத்து, “சாமிநாதையருக்கு எந்தச் சமயத்தில் என்ன வேண்டுமோ அதை விசாரித்து நம்மிடம் தெரிவித்து அதைச் செய்து கொடுக்க வேண்டும். அவர் வீட்டுக்கு வேண்டிய சாமக்கிரியைகளின் விஷயத்தை எப்பொழுதும் நீரே விசாரித்துக்கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

பொன்னுசாமி செட்டியார் மிக்க விநயமும் என்பால் அன்பும் உடையவர். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயின்று இன்புறுவார். செய்யுள் இயற்றும் ஆற்றலும் அவருக்கு உண்டு. மடத்திற்குப் பல பெரிய மனிதர்கள் வந்து செல்வார்கள். அவர்களிடத்தில் எப்படிப் பழக வேண்டுமோ அவ்வாறு பழகுவதோடு தமக்கும் ஆதீனத்திற்கும் நல்ல பெயரை உண்டாக்குவார். அவருடம் எஜமான விசுவாசமும், குருபக்தியும் சிறந்திருந்தன. தம் வாழ்நாள் முழுவதும் ஆதீனத்தொண்டராகி வாழ்ந்தார். அவர்பால் எங்கள் குடும்பப் பாதுகாப்பை ஆதீனத் தலைவர் ஒப்பிக்கவே அவர் மிகுதியான கவனத்தோடு தம் கடமையைச் செய்யலானார். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெரும்பாலும் குறிப்பால் அறிந்து அவற்றை அனுப்பிவந்தார்.

அவருடைய விசாரணையினால், இடையூறு செய்யப் புகுந்தவர்கள் முயற்சி ஒன்றும் பலிக்கவில்ல. தம்முடைய இயல்பு ஆதீனத் தலைவர்காதிற்கு எட்டினால் பெருத்த அபாயம் நேருமென்று அவர்கள் அஞ்சினர். வர வர அவர்களும் தம் பொறமையினின்றும் நீங்கினர். தினந்தோறும் மடத்திலிருந்து தக்க காலத்தில் எங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் பிறவும் குறைவின்றிக் கிடைத்து வந்தன.

நெல்லும் பணமும்

ஒரு நாள் எங்கள் வீட்டு வாயிலில் மூன்று வண்டிகள் வந்து நின்றன. சில ஆட்கள் இரண்டு குதிர்களைக் கொணர்ந்து வீட்டில் வைத்தனர். சிலர் வண்டியிலிருந்த அறுபது கல நெல்லை முப்பது முப்பது கலமாக அவ்விரண்டிலும் கொட்டி மண் பூசிவிட்டு, “ஸந்நி-