பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

என் சரித்திரம்

கள்-2.6 அவை அப்பிரபந்தத்தோடு சேர்த்துத் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் அச்சிடப் பெற்றன.

அக்காலத்தில் மடத்தில் இருந்த தம்பிரான்களும் மாணாக்கர்களும் சிறப்புப்பாயிரமளித்தனர். அந்த அந்தச் சிறப்புப் பாயிரத்திற்கு முன்பு அதனை அளித்தார் பெயர் அவருக்குரிய சிறப்புக்களோடு வெளியிடப்பட்டது.

‘திருவாவடுதுறை யாதீனத்துச் சிஷ்ய வர்க்கத்துள் ஒருவரும் பாண்டிய நாட்டுள்ள மேலகரம் திரிகூட ராஜப்பக் கவிராயரவர்கள் வம்சஸ்தருமாகிய சண்பகக் குற்றாலக் கவிராயரவர்களியற்றிய அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்’ என்பது போலத் தலைப்புக்கள் அமைக்கப்பட்டன.

என் பாடல்கள்

நானும் இரண்டு செய்யுட்கள் சிறப்புப் பாயிரமாகச் செய்தேன். சுப்பிரமணிய தேசிகருடைய பேரன்பினால் எல்லா வகையான அனுகூலங்களையும் அடைந்த நான் அவர்பால் எனக்குள்ள நன்றியறிவைப் புலப்படுத்த வழிதெரியாமல் இருந்தேன். நல்ல வேளையாக இச்சிறப்புப் பாயிரம் அதற்குரிய சந்தர்ப்பத்தை உண்டாக்கியது. கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே உதவி வந்த தேசிகர் பெருமையை இரண்டாம் செய்யுளில் வெளியிட்டேன். அது வருமாறு:

“தேனாட்டு மலர்பொழிற்கோ முத்தியிற்சுப் பிரமணிய
     தேவனென்னைத்
தானாட்ட விருபொருளு மொருங்கருள்த யாநிதியின்
     சலசத் தாண்மேல்
வானாட்டி னமுதேய்ப்ப மும்மணிக்கோ வையைநவிற்றி
     வனைந்தான் யாரும்
மேனாட்டு நயசுகுணப் பரமசிவ முனிவரவித்
     துவசிங் கேறே”

[கோமுத்தி - திருவாவடுதுறை. என்னைத்தான் நாட்ட, இரு பொருள் - கல்வி, செல்வம். சலசம் - தாமரை. வித்துவசிங்க ஏறு - புலமையில் ஆண் சிங்கம் போன்றவன்.]

‘ஆதீன வித்துவான்‘

சிறப்புப் பாயிரத்திற்கு முன் என் பெயரை அமைக்கும் பொழுது ‘திருவாவடுதுறை ஆதீன வித்துவான்’ என்றும் போடும்படி