பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற சன்மானங்கள்

437

காட்டாமல் கடைசி வரையில் மறைவாகவே வைத்திருந்தனர். திடீரென்று சபையில் வாசிக்கும் போது எல்லோரும் கேட்டு நயங்களை அறிந்து பாராட்டவேண்டு மென்பது அவர்கள் கருத்து. நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனே.

பரமசிவத் தம்பிரான், குமாரசாமித் தம்பிரான் முதலிய தம்பிரான்களும், மதுரை இராமசாமி பிள்ளை முதலியவர்களும் தாம் தாம் இயற்றிய செய்யுட்களை என்னிடம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு நான் படித்துக்காட்டத் தொடங்கினேன். முப்பது பாடல்கள் இருந்தன. ஒவ்வொரு செய்யுளையும் இசையுடன் படித்து எனக்குத் தோற்றிய நயங்களையும் எடுத்துச் சொன்னேன். நான் இயற்றியிருந்த மூன்று செய்யுட்களையும் படித்துக் காட்டினேன். அவற்றுள் ஒரு பாடலில், “இந்த மண்டபத்தைக் காலில்லா மண்டபமென்று யாவரும் கூறுவார். அங்கே தென்கால் (தென்றற்காற்று) பலகாலும் விரவுதலால் நான் அங்ஙனம் கூறேன்” என்ற கருத்தை அமைத்திருந்தேன். கால் என்பதற்குத் தூண், காற்று என்று இரண்டு பொருள் படும்படி பாடிய அச் செய்யுளைக் கேட்டு யாவரும் இன்புற்றனர்.

எல்லாவற்றையும் கேட்ட சுப்பிரமணிய தேசிகர், “நன்றாயிருக்கின்றன; எல்லாம் பிள்ளையவர்களுடைய செய்யுட்களின் போக்கு” என்று தம் திருப்தியைத் தெரிவித்தார். அதைக்காட்டிலும் உயர்ந்த மதிப்புரை வேறு இருப்பதாக எங்களுக்குத் தோற்றவில்லை. அச்சபையில் பலர் முன்னிலையில் கிடைத்த மதிப்பு எங்களுக்கு அளவற்ற இன்பத்தை அளித்தது. பிள்ளையவர்களைப் பற்றிய நினைவுடனே அன்றிரவு நாங்கள் துயிலச் சென்றோம்.

அத்தியாயம்—72

நான் பெற்ற சன்மானங்கள்

முமுன் குறிப்பிட்ட தக்ஷிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பா சமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் அழகான பெரிய மடம் ஒன்றைக் கட்டுவித்து, அதற்கு, “சுப்பிரமணிய தேசிக விலாசம்” என்று பெயரிட்டார். அப்பால் அவர் ஒரு முறை திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரிடம், “சந்நிதானம் திருக்கூட்டத்துடன் செவந்திபுரத்துக்கு எழுந்தருளிச் சில தினங்கள் இருந்து கிராமங்களையும் பார்வையிட்டு